மேலும்

சிறிலங்காவை வடிவமைக்கும் சீனா

சிறிலங்காவில் அடுத்த 15 தொடக்கம் 20 ஆண்டுகளுக்கு ஜேவிபி அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நிலைத்திருக்க செய்யும் முயற்சியில், சீன அரசாங்கம் இறங்கிருப்பதாக தெரிகிறது.

அதற்காக, நேரடியான தலையீட்டை மேற்கொண்டு, அல்லது நாட்டை கைப்பற்றி, இந்த ஆட்சியை நிலைத்திருக்க செய்வதற்கு முனைகிறது என்று அர்த்தம் இல்லை.

அடுத்து வரக்கூடிய மூன்று, நான்கு தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதன் ஊடாக, அந்த இலக்கை அடைவதற்கு சீனா விரும்புகிறது.

கடந்த ஜூன் மாதம் ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான உயர்மட்ட குழு,  சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், அந்தக் குழு அங்கு சென்றிருந்தது.

இதன்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், சீன அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை, அவர் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

அத்துடன் சீனாவின் பல்வேறு மாகாணங்களுக்கும் சென்று, அவற்றை ஆட்சி செய்யும்அதிகாரிகளுடனும் அவர் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார்.

இந்த பேச்சுக்களின் போது, சிறிலங்காவில் ஜேவிபி எதிர்பார்க்கின்ற மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாகவும், அதற்கான சூழல்களை ஏற்படுத்துவது குறித்தும், விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்தப் பயணம் குறித்து ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

அர்த்தமுள்ள சீர்திருத்தங்களைச் செயற்படுத்துவதற்கு, குறைந்தபட்சம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை, ஒரே அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறிலங்காவில் பெரியளவிலான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த போவதாக – முறைமை மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக – வாக்குறுதி கொடுத்தே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.

ஆனால் 10 மாதங்களுக்கு மேலாகியும் அந்த கட்சியினால் எதிர்பார்க்கப்பட்ட  மாற்றங்களை ஏற்படுத்தும் பணி வெளிப்படையான முறையில் இன்னமும் தொடங்கப்படவில்லை.

இவ்வாறான சூழலிலேயே, இது குறித்து சீனாவுடன் பேசப்பட்டிருக்கிறது.

இதன்போதே,  ஐந்து ஆண்டுகளுக்குள் நாம் கற்பனை செய்யும் மாற்றங்களைச் செய்ய முடியாது.திட்டமிட்ட மாற்றங்களைச் செயற்படுத்த 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும்.

இன்னும் மூன்று முதல் நான்கு தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள், தன்னிடம் கூறியதாக  ரில்வின் செல்வா வெளிப்படுத்தியிருக்கிறார்.

சீனாவை மாற்றுவதற்கு அவர்களுக்கு, சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் தேவைப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் இதனை அவருக்கு கூறியதன் அடிப்படையில் தான், அவர் இந்த உதாரணத்தை குறிப்பிட்டிருக்கிறார்.

இதிலிருந்து, திட்டமிட்ட மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள், அவற்றை சமாளிப்பதற்கான உத்திகள் குறித்து ரில்வின் சில்வா சீன அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல.

ஜேவிபியினர் எதிர்பார்ப்பது போல,  ஒரு பதவி காலத்துக்குள் எதிர்பார்க்கும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என அவருக்கு எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது.

நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினால் அடுத்த மூன்று நான்கு தேர்தல்களில் ஆட்சி அமைத்து இருபது ஆண்டுகள் வரை ஆட்சியில் இருக்க வேண்டும் என சீன தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த மாற்றத்தின் ஊடாக சீனா தனக்கு சாதகமான ஒரு சூழலை சிறிலங்காவில் ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறது என்பதையும் உணர முடிகிறது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ மிகப்பெரியளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பின்னர், அவருக்கு நெருக்கமாக  இருந்த அமைச்சர்கள் பலரும்,  அடுத்த 20 ஆண்டுகளுக்கு கோட்டாவின் ஆட்சிதான் என்றும் அதை யாரும் அசைக்க முடியாது என்றும் கூறியது நினைவிருக்கலாம்.

அதுவும், இப்போது கூறப்பட்டுள்ள கருத்தை  அடிப்படையாக கொண்டது தான்.

சீனாவுக்கு சார்பான மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் வீழ்ச்சி அடைந்தது.

ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் நாட்டை மாற்றியமைக்கும் திட்டங்கள் இருக்கவில்லை.

கொள்கை ரீதியான திட்டங்களை நடைமுறைப்படுத்த அவர்கள் முனையவில்லை.

அப்போது அத்தகைய திட்டங்களை ஒழுங்கமைத்துக் கொடுக்கின்ற அளவுக்கு சீனா நெருங்கிய நிலையில் இருக்கவும் இல்லை.

அதற்குப் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியமைத்த போது சீனாவுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

கொள்கை ரீதியான கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்துகின்ற திட்டங்களுடன் தான் கோட்டாபய ராஜபக்ஷவும் ஆட்சிக்கு வந்திருந்தார்.

அதற்காக அவர் துறைசார் நிபுணர்களின் அமைப்புகளையும் உருவாக்கி வைத்திருந்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக கோட்டாபய ராஜபக்ஷவினால் அந்த முயற்சிகளில் வெற்றிபெற முடியவில்லை. சீனாவினாலும் அவரை காப்பாற்றக் கூடிய சூழல் இருக்கவில்லை.

இப்பொழுது சீனா முழுமையாக நம்பியிருப்பது ஜேவிபியின் இப்போதைய அரசியல் வடிவமான தேசிய மக்கள் சக்தியைத் தான்.

இது உருவாக்கியுள்ள  கொள்கை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது சீனாவுக்கு சாதகமானது.

அது சீன ஆட்சி நிர்வாகத்தின் செயற்பாடுகளை பல விடயங்களில் ஒத்துப் போகக்கூடியது.

சிறிலங்காவில் ஜனநாயக ஆட்சி முறை இருந்தாலும் பல விடயங்களில் சீன முறையில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

20 ஆண்டுகளுக்கு மேல் ஒரு கட்சி ஆட்சியில் இருக்குமானால், அங்கு ஜனநாயகம் முற்று முழுதாக குழி தோண்டி புதைக்கப்படும்.

கிட்டத்தட்ட சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை ஒத்த, ஒரு கட்சி ஆட்சி, சிறிலங்காவிலும் உருவாக்கப்பட்டு விடும்.

அத்தகைய ஒரு நிலையை உருவாக்குவதற்கு சீனா விரும்புகிறது போல தெரிகிறது.

அதற்கு ஜேவிபியை அது பயன்படுத்திக் கொள்ள முனைந்திருந்தால்,ஆச்சரியம் இல்ல.

ஏனென்றால் இரண்டு தரப்புகளுக்கும் இடையில் கொள்கை ரீதியான ஒருமைப்பாடுகள் இருக்கின்றன.

இந்தநிலையில் ஜேவிபி ஊடாக-  சிறிலங்காவில் சீன சார்பு அரசு ஒன்று-  சீன மாதிரி அரசு ஒன்று தோற்றம் பெறுவது என்பது சீனாவுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும்.

அதற்கான ஒரு வாய்ப்பை சீனா பயன்படுத்திக் கொள்வதற்கு எத்தனிப்பதாக தெரிகிறது.

ஜேவிபி பொதுச் செயலாளர்  ரில்வின் சில்வாவுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்ற விடயங்கள், இதனையே உணர்த்துவதாக உள்ளன.

சீன அதிகாரிகளுடனான பேச்சுக்களின் போது கலந்துரையாடப்பட்ட முக்கியமான விடயங்களில் ஒன்று, நீண்டகால ஆட்சி நிர்வாகம் பற்றியது என ரில்வின் சில்வா கூறியிருக்கிறார்.

இது ஜேவிபி நீண்ட காலத்துக்கு ஆட்சியில் நிலைத்திருப்பதற்கான வழி வகைகளை பற்றிய ஆலோசனையாகும்.

ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டால் ஜேவிபியினால் நீண்ட காலத்துக்கு ஆட்சியில் இருக்கும் கனவை நனவாக்க முடியாது.

எனினும், அவ்வாறான ஒரு முயற்சியில் ஜேவிபியும் சீனாவும் இணைந்து செயல்படுகின்றன என்பதை, ரில்வின் சில்வாவின் கருத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

ஜேவிபி நீண்டகாலம் எதிர்க்கட்சியாகவே இருந்து வந்த ஒன்று, அவ்வாறான கருத்துக்களையே வெளியிட்டு பழகிப்போன ஒன்று.

இனிமேலும் அவ்வாறு எதிர்க்கட்சி போல செயற்பட கூடாது என்றும் விரைந்து செயற்பட வேண்டும் என்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை கூறியிருக்கிறது.

இதற்காக நிர்வாகம், முகாமைத்துவம், பொருளாதார வெற்றி குறித்து, ஆலோசனைகளை வழங்குவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி உதவ முன்வந்திருப்பதாகவும் ரில்வின் சில்வா கூறுகிறார்.

இவையெல்லாம், சீன கம்யூனிஸ்ட் கட்சி, ரில்வின் சில்வாவையும் ஜேவிபியையும், மேலிருந்து வழிநடத்துகின்ற ஒன்றாக மாறியிருக்கிறதா என்ற சந்தேகங்களை தோற்றுவித்திருக்கிறது.

இப்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பின்னால் இருந்து இயக்குவது ரில்வின் சில்வா என்பது யாவரும் அறிந்த விடயம்.

அவரை சீனா பின்னாலிருந்து இயக்குகிறது என்றால், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த விடயம் குறித்து அதிகம் சிந்திக்காமல் இருக்க முடியாது.

ஏனென்றால், தெற்காசியாவில்- இந்திய பெருங்கடலின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் – சீனாவுக்கு சார்பான-  சீனாவை ஒத்த-  ஒரு ஆட்சி உருவாவதை இந்த நாடுகள் நிச்சயம் விரும்பாது.
– ஹரிகரன்
வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு (10.08.2025)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *