ஜெனிவாவில் புதிய தீர்மானம் – சிறிலங்கா அரசுக்கு அறிவிப்பு
அடுத்தமாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான புதிய பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக கனடாவும், பிரித்தானியாவும் அறிவித்துள்ளன.
சிறிலங்கா அரசாங்கத்திற்கு இதனை இந்த நாடுகள் தெரியப்படுத்தியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாய்மொழியாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை,ஜெனிவாவில் முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விட, இம்முறை கொண்டு வரப்படும் பிரேரணையின் வாசகங்கள் மென்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை சிறிலங்கா தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய அமெரிக்கா, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியுள்ளது.
இதனால், சிறிலங்கா குறித்த பிரேரணையை முன்வைக்கும் அனுசரணை நாடுகளின் குழுவில் மாற்றம் ஏற்படலாம் என்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.
கடந்தமுறை தீர்மானத்தை முன்வைத்த அனுசரணை நாடுகள் குழுவில் இடம்பெற்றிருந்த மலாவி, மொன்ரெனிக்ரோ,வடக்கு மசிடோனியா என்பன இம்முறை அனுசரணை நாடுகள் குழுவில் இடம்பெறாமல் போகலாம் என்று அந்த அதிகாரி குறிபபிட்டுள்ளார்.
இதனிடையே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்ரெம்பர் 8ஆம் திகதி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் நாளில், சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த இறுதி அறிக்கையை, சமர்ப்பிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் அண்மையில் செம்மணிப் புதைகுழியை பார்வையிட்டிருந்தார் என்பதால், அவரது அறிக்கையில் அதுபற்றி முக்கியமாக குறிப்பிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.