பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் பெரும் எண்ணிக்கையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள, நடவடிக்கை எடுக்கப்படும்.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடந்தபோது, பிரதி அமைச்சர் அருண ஜயசேகர சிறிலங்கா இராணுவத்தின் கிழக்கு மாகாணத் தளபதியாகப் பணியாற்றினார்.
அதே நேரத்தில், தாக்குதல்களைத் தொடர்ந்து நடந்த குண்டு வெடிப்புகள் தொடர்பான ஆதாரங்களை மறைத்ததாகவும், தாக்குதல்கள் பற்றிய தகவல்களை வைத்திருந்த சாட்சிகளை மறைத்து காணாமல் ஆக்கியதாகவும், ஜயசேகர மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பிரதி அமைச்சர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் துறைக்கு இரண்டு மணி நேர வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்களை மறைத்ததாக நாடாளுமன்றத்திலும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதுபோன்ற சூழலில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவியை வகிப்பது தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
கத்தோலிக்க திருச்சபை கூட அருண ஜயசேகர தொடர்புடைய விசாரணைகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய நிலையில் இருக்கிறது.
இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல், தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகளை – உண்மையான சதிகாரர்கள் மற்றும் மூளையாகச் செயல்பட்டவர்களை – விசாரித்து தண்டிப்பது மிக முக்கியம் என்பதில் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நாட்டின் சாதாரண குடிமக்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து உள்ளது,” என்றும் அஜித் பெரேரா கூறினார்.