அடுத்த மாதம் ஐ.நா, ஜப்பானுக்குப் பயணமாகிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக செப்ரெம்பர் 23ஆம் திகதி அனுரகுமார திசாசாயக்க நியூயோர்க்கிற்குப் பயணமாகவுள்ளார் என, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச்சபை அமர்வில் அவர், செப்ரெம்பர் 24ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.
ஐ.நாவில் நிகழ்த்தவுள்ள தனது முதலாவது உரையில், சிறிலங்கா அதிபர் தமது அரசாங்கத்தின் கொள்கைகள், குறித்து குறிப்பாக வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக விபரிப்பார்.
அத்துடன் நியூயோர்க்கில் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அனுரகுமார திசாநாயக்க சந்தித்துப் பேசுவார் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் இருந்து செப்ரெம்பர் 27ஆம் திகதி ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளும் சிறிலங்கா அதிபர், ஒசாகாவில் நடைபெறும், எக்ஸ்போ 2025 கண்காட்சியில் பங்கேற்கவுள்ளார்.
அதன் பின்னர், ஜப்பானியப் பிரதமர் ஷிகிரு இஷிபாவின் அழைப்பின் பேரில், அனுரகுமார திசாநாயக்க, செப்ரெம்பர் 28ஆம் திகதி, முதல் ஜப்பானில் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்வார்.
இதன்போது, செப்ரெம்பர் 29ஆம் திகதி ஜப்பானியப் பிரதமர் ஷிகிரு இஷிபாவையும், 30ஆம் திகதி ஜப்பானிய சக்கரவர்த்தி நருஹிடோவையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
ஜப்பானில் இலங்கையர்களுக்கு அஅதிக வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பது மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன் சிறிலங்காவில் வாகனங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கான முன்மொழிவையும் சிறிலங்கா அரசாங்கம் ஜப்பானிடம் முன்மொழியவுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
