செம்மணியில் 147 எலும்புக்கூடுகள் அடையாளம் – அகழ்வு இடைநிறுத்தம்
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழிகளில் இருந்து, 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் 32 ஆவது நாள் அகழ்வு, யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, புதிதாக 6 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு, இலக்கமிடப்பட்டுள்ளன.
அதேவேளை, ஏற்கனவே இனங்காணப்பட்ட 3 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் இதுவரை, 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன், 133 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் செருப்பு மற்றும் இடுப்பில் தாயத்துப் போன்ற பொருள் ஒன்று கட்டப்பட்ட நிலையில் இருந்த, எலும்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அது நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அகழ்வுப் பணியாளர்களின் ஓய்வுக்காக, நேற்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மீண்டும் 22ஆம் திகதி முதல் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.