செம்மணி புதைகுழி விசாரணையில் சர்வதேச தலையீட்டுக்கு இடமில்லை
செம்மணி போன்ற மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணையில், சர்வதேச தலையீடு தேவையில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாபர்,
செம்மணி போன்ற மனிதப் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆய்வு செய்வதற்கு, சர்வதேச நிபுணர்களின் தொழில்நுட்ப உதவியை நாட வேண்டியிருக்கலாம்.
ஆனால், வேறு எந்த வகையான சர்வதேச தலையீடும் தேவையில்லை.
நடந்துகொண்டிருக்கும் விசாரணை செயல்முறையை அரசாங்கம் முழுமையாக ஆதரிக்கிறது.
இதுபோன்ற விசாரணைகளில் சர்வதேச ஈடுபாடு தேவை என்று, வடக்கில் சில குழுக்கள் நீண்ட காலமாக அழைப்பு விடுத்து வரும் நிலையில், தற்போதைய விசாரணைகளை அரசாங்கம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.
நியாயமான விசாரணைக்கு ஏற்கனவே இடமளிக்கப்பட்டுள்ளது.
எலும்புக்கூடுகளை அடையாளம் காணுதல் அல்லது மேம்பட்ட தடயவியல் பரிசோதனை நடத்துதல் போன்ற சர்வதேச தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால், அதைப் பற்றி நாம் விவாதிக்கலாம்.
ஆனால், அது தவிர, வேறு எந்த வகையான தலையீடும் தேவையில்லை, நாங்கள் எங்கள் முழு ஆதரவையும் வழங்குகிறோம்,” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.