உலங்குவானூர்தி விபத்து- ஆய்வுக்கு வந்தது அமெரிக்க நிபுணர் குழு
மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சிறிலங்கா விமானப்பரடை உலங்குவானூர்தியை பரிசோதனை செய்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நிபுணர்கள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.
கடந்த மே 9ஆம் திகதி மாதுருஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இருந்து, படையினரை ஏற்றிச் சென்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, சிறிலங்கா விமானப்படையின் பெல்- 212 உலங்குவானூர்தி, மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், சிறிலங்கா விமானப்படை மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
விபத்திற்குள்ளான உலங்குவானூர்தி மீட்கப்பட்டு, கட்டுநாயக்க விமானப்படை பொறியியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்களை ஆராயும் பல்வேறு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அமெரிக்காவில் இருந்து பெல் உலங்குவானூர்திகளை தயாரிக்கும் பெல் ரெக்ஸ்ட்ரோன் நிறுவனத்தின் நிபுணர்கள் குழுவொன்று கொழும்பு வந்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது.
விசாரணைகள் நிறைவடைந்ததும், விபத்துக்கான காரணங்களை உள்ளடக்கிய அறிக்கை சிறிலங்கா விமானப்படைத் தளபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.