செம்மணியில் மேலும் 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி, சித்துப்பாத்தி மயானப் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி, இன்று 17 ஆவது நாளாக இடம்பெற்றது.
இன்றைய அகழ்வுப் பணியின் போது, மேலும் 8 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியில், 65 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள், முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நேற்றும் இன்றும் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இன்னமும் அகழ்ந்தெடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 80 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வின் போது சிறுவர்களுடையவை என கருதப்படக் கூடிய எலும்புக்கூடுகளும் தென்பட்டுள்ளது. நாளைய அகழ்வின் போதே அவை முழுமையாக வெளியே எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.