செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை- அவுஸ்ரேலியாவில் பேரணி
யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதைகுழித் தளத்திற்கு, ஜூன் 25 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் பயணம் மேற்கொண்ட நிலையில், ஜூலை 21 ஆம் திகதி அவுஸ்ரேலியா முழுவதிலுமிருந்து வந்த தமிழர்கள் கன்பராவில் பேரணி நடத்தினர்.
செம்மணியில் உள்ள புதைகுழித் தளம் சிறிலங்காவில் தோண்டியெடுக்கப்பட்ட டசின் கணக்கான புதைகுழிகளில் அண்மையதாகும்.
26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள், சிறிலங்கா அரசால் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டு புதைக்கப்பட்டனர், மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இந்தப் பேரணி சிறிலங்கா தூதரகத்தில் தொடங்கி பல தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் மற்றும் அவுஸ்ரேலியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தக திணைக்களங்கள் வரை தொடர்ந்தது.
சர்வதேச நீதி மற்றும் உறுதியான நடவடிக்கையைக் கோரி தமிழர்கள் விரிவான விளக்கங்களை வழங்கினர்.
செம்மணிப் புதைகுழிகள் இனப்படுகொலைக்கான சான்றுகள் மட்டுமல்ல – அவை உலகிற்கு ஒரு அழைப்பு. ஒவ்வொரு குறிக்கப்படாத புதைகுழியும் ஒரு கேள்வி: நீங்கள் நீதிக்காக நிற்பீர்களா, அல்லது நீங்கள் விலகிப் பார்ப்பீர்களா?” என்று தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார் கேள்வி எழுப்பினார்.
சிறிலங்காவில் உள்ள செம்மணி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து விரிவான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்;
செப்ரெம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது சிறிலங்காவுக்கு எதிராக வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்;
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா ஏற்கனவே செய்துள்ளது போல, இனப்படுகொலையில் தொடர்புடைய சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மீதான பயணத் தடைகள்;
இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள் மற்றும் முக்கிய சாட்சிகள் பாதுகாக்கப்பட்டு இங்கு அடைக்கலம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதை முடிவுக்குக் கொண்டுவர சிறிலங்கா இராணுவத்தை கட்டாயப்படுத்தவும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கவும், அடக்குமுறை சட்டங்களை ரத்து செய்யவும், தமிழ் இனப்படுகொலையை சர்வதேச அளவில் அங்கீகரிப்பதற்கும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நம்பகமான பாதையை உருவாக்கவும் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் இந்தப் பேரணி அவுஸ்ரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தியது.
இது வரலாறு அல்ல – இது ஒரு உயிருள்ள குற்றக் காட்சி. மௌனம் என்பது உடந்தை. தமிழ் இனப்படுகொலைக்கான நீதி இப்போது தொடங்குகிறது,” என்று இன்பகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் – Zebedee Parkes
வழிமூலம் – greenleft