தேசபந்து தென்னக்கோன் குற்றவாளி – பதவியில் இருந்து நீக்கவும் பரிந்துரை
பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.
நீதியரசர் பிரீதி பத்மன் சுரசேன தலைமையிலான மூன்று பேர்கொண்ட விசாரணைக் குழுவை சிறிலங்கா நாடாளுமன்றம் நியமித்திருந்தது.
இந்தக் குழு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக தேசபந்து தென்னக்கோன் மீது சுமத்தப்பட்ட 7 குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விசாரணைகளை நடத்தி, சபாநாயகரிடம் தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையிலேயே தேசபந்து தென்னக்கோன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் அவரை காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான குற்றப் பிரேரணை விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு விவாதம் நடத்தப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.