மேலும்

இனியபாரதியின் சகாவும் கைது- நீண்ட குற்றப்பட்டியலுடன் விசாரணை

பிள்ளையானிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்தே, இனியபாரதியும் மற்றொருவரும் கிழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இனிய பாரதி என அழைக்கப்படும் குமாரசாமி புஷ்பகுமார் (வயது 45) நேற்று அதிகாலை  திருக்கோவிலில் கைது செய்யப்பட்டார்.

அவரது கூட்டாளியான 44 வயதுடைய  மற்றொரு நபர் மட்டக்களப்பு சந்திவெளியில் கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், அல்லது பிள்ளையானிடம், நடத்தப்பட்ட விசாரணையின் போது,கிடைத்த புதிய ஆதாரங்களைத் தொடர்ந்தே, இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிள்ளையான் 2025 ஏப்ரல் 8 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொலைகள், ஆட்கடத்தல்கள்,  வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்கள், சித்திரவதை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிப் பயன்பாடு உள்ளிட்ட பல கடுமையான குற்றங்கள் தொடர்பாகவே,  இரண்டு பேரும், குற்றப் புலனாய்வுத் துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா  காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

2005 ஆம் ஆண்டுக்கும் 2008 ஆம் ஆண்டுக்கும் இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து, திருக்கோவில் மற்றும் சந்திவெளியில் வைத்து இவர்கள்,  கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, முதல் சந்தேக நபரான இனியபாரதி, 2004 இல் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய பின்னர் திருக்கோவிலில் கருணா குழு என்ற ஆயுதக்குழுவின் முகாம் தலைவராக செயற்பட்டார்.

பின்னர் அவர் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் கருணாவின்  ஆதரவுடன் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அம்பாறை மாவட்டத்திற்கான சிறிலங்கா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றினார்.

2012 முதல் 2015 வரை, கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இரண்டாவது சந்தேக நபர்,  இனியபாரதியின் நெருங்கிய கூட்டாளியாகவும் கீழ்படிந்தவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு சந்தேக நபர்களும் ‘பிள்ளையான்’ என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் பல குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது என்று காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

  • 2005 பிப்ரவரி 7ஆம் திகதி, வெலிகந்த, புளியங்குளத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவம்.
  • 2007 மே 9 ஆம் திகதி,  ‘சிந்துஜன்’ என அழைக்கப்படும் ஜோன்சன் ஜெயகாந்தன் கொலை செய்யப்பட்ட சம்பவம்.
  • 2007 ஜூன் 28ஆம் திகதி,  திருக்கோவில் பிரதேச சபைத் தலைவர் பிள்ளைநாயகம் உதயகுமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.
  • 2007 ஜூலை  27 ஆம் திகதி, திருக்கோவிலில்  சிவானந்தன் அழகுராசா கடத்தப்பட்ட சம்பவம்.
  • 2008 ஏப்ரல் 20 ஆம் திகதி, கல்முனை பாண்டிருப்பில் கிராம சேவை உத்தியோகத்தர்களான நாகராசா மற்றும் கனகா ஆனந்தி ஆகியோரின் இரட்டைக் கொலை.
  • 2008 செப்ரெம்பர் 25 ஆம் திகதி,  திருக்கோவில் விநாயகபுரத்தில் பண்டிதர் திருமால் திருவேல்வம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.
  • 2008 நொவம்பர் 21 ஆம் திகதி, திருக்கோவில் விநாயகபுரத்தில் இராசையா கோகுலன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அவரது தாய் சுடப்பட்டு படுகாயமடைந்த சம்பவம்.
  • 2022 டிசம்பர் 21 ஆம் திகதி, அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற வளாகம் தீ வைக்கப்பட்ட தாக்குதல் சம்பவம்.

போன்ற கடுமையான குற்றச்செயல்களுடன் சந்தேக நபர்கள் தொடர்புடையவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இனியபாரதி, போர்க் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் கொலைகள், கடத்தல்கள், சித்திரவதை அறைகளுக்கு நபர்களை கொண்டு செல்வது மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதில் நேரடியாக ஈடுபட்ட ஒருவர் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளில் முன்னர் பெயரிடப்பட்டுள்ளார் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவை குறித்தும், வேறு குற்றங்களில் சந்தேக நபர்களின் முழு ஈடுபாடு குறித்தும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *