தமிழ் அரசியல் கைதிக்கு பிணை வழங்கியதற்கு எதிராக சட்டமா அதிபர் மேல்முறையீடு
தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியதை எதிர்த்து சிறிலங்கா சட்டமா அதிபர் மேல்முறையீடு செய்யவுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவைக் கொலை செய்ய முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு, 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான தம்பையா பிரகாஷ், மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டது.
சந்தேக நபரின் விடுதலை, கொழும்பு மேல்நீதிமன்றத்தில் அவர் மீதும், மேலும் இருவர் மீதும் நடைபெற்று வரும் வழக்கைப் பாதிக்கக் கூடும் என்று சட்டமா அதிபர் மேல்முறையீடு செய்யவுள்ளார்.
அவர் மீது 230 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிரான வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு பரிசீலிக்கப்பட்ட பின்னர், சந்தேக நபருக்குப் பிணை வழங்கப்பட்டது.
அதன்படி, அவருக்கு நான்கு பிணையாளர்களுடனும், ரூ. 200,000 ரொக்கப் பிணையுடனும் பிணை வழங்கப்பட்டது.
சந்தேக நபர் 2009-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2012 செப்ரெம்பர் 20-ஆம் நாள் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
