மூழ்கிய அதிவேகத் தாக்குதல் படகை மீட்டது சிறிலங்கா கடற்படை
அங்குலான கடற்பகுதியில் மூழ்கிய சிறிலங்கா கடற்படையின் பி 4447 அதிவேகத் தாக்குதல் படகு, மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஓகஸ்ட் 15 ஆம் நாள், அங்குலான கடற்பகுதியில் ரோந்துப் பணியின்போது, திடீர் விபத்திற்குள்ளாகி, இந்தப் படகு மூழ்கியது.
இந்த விபத்தில் 11 கடற்படையினர் காயங்களுடன் மீட்கப்பட்ட அதேவேளை படகின் துணை கட்டளை அதிகாரி காணாமல் போயிருந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
கடந்த 11 ஆம் நாள், சுமார் 80 அடி ஆழத்திலிருந்து மேற்பரப்பிற்குக் கொண்டு வரப்பட்ட படகு, மூழ்கிய நிலையில், கொழும்பு கப்பல் கட்டும் தள வளாகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது.
சிறிலங்கா கடற்படையின் சிறப்பு சுழியோடிகள் மற்றும் மீட்புக் குழுக்கள், கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, கொந்தளிப்பான கடல் சூழல் மற்றும் நீருக்கடியில் உள்ள சவால்களுக்கு மத்தியில் மீட்புப் பணியைத் தொடங்கின.
சிறிலங்கா கடற்படையின் கடல்சார், கப்பல் கட்டமைப்பு, மின்சார மற்றும் மின்னணுப் பொறியியல் குழுக்கள், சிறப்புத் தொழில்நுட்ப உபகரணங்களையும் பயன்படுத்தி, படகை படிப்படியாக மேலே உயர்த்தி முழுமையாக வெளியே கொண்டு வரப்பட்டு, பழுதுபார்க்கும் பணிகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.



