சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகம் குறித்து ஆராயும் குழுவுக்கு அனுமதி
சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை நிறுவுவது குறித்து, ஆய்வு செய்வதற்கான, தொழில்நுட்ப நிபுணர் குழுவை நியமிப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்மொழிந்திருந்தார்.
இந்த நிபுணர் குழுவிற்கு உயர்நீதிமன்ற நீதியரசர், யசந்த கோதாகொட தலைமை தாங்குவார்.
இந்த பணியகத்தை உருவாக்குவதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்வதும், இருக்கும் சட்டங்களில் தேவைப்படும் திருத்தங்களை பரிந்துரைப்பதும் இந்த நிபுணர் குழுவின் பணியாகும்.
நீதித்துறை அமைப்பில் ஏற்படும் தாமதங்களைத் தடுப்பதற்கான ஒரு பொறிமுறையாக, சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் சார்பாக வழக்குகளை விசாரிக்க, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வெளியே ஒரு சுயாதீனமான வழக்குத்தொடுநர் பணியகத்தை நிறுவவும், மாகாணங்களில் துணை பணியகங்களை நிறுவவும் தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் அறிக்கையில் முன்மொழிந்திருந்தது.
குற்றவியல் நீதி அமைப்பின் சுதந்திரத்தையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்துவதும், சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதன் மூலம் பொதுமக்கள் நம்பிக்கையை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.
