மேலும்

அதிபர் தேர்தலில் போட்டி – ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அறிவிப்பு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இன்று பிற்பகல் நடந்த தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாட்டிலேயே, அந்த அமைப்பின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக, ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அறிவித்தார்.

சிறிலங்காவுக்கு மாற்று  சக்தி தேவைப்படுவதாகவும், அந்த மாற்று சக்தியாக தாம் இருக்க முடியும் என்று நம்புவதாகவும், ஜெனரல் மகேஸ்  சேனநாயக்க தெரிவித்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் இராணுவத்தில் இருந்து விலகிய ஜெனரல் சேனநாயக்க, தேர்தலில் போட்டியிடுமாறு தம்மை மக்கள் குழுவினர் அழைத்தனர் என்றும் குறிப்பிட்டார்.

இராணுவத்தில் இருந்து நாட்டுக்கு நல்ல சேவையாற்றியதாக தாம் உணருவதாகவும், ஆனாலும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேவை இருப்பதாகவும், அவர் கூறினார்.

அரசியல் நாட்டைப் பாழாக்கி விட்டதாகவும், எனவே நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த சுதந்திரமான சக்தி ஒன்று அவசியம் என்றும் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.

தமது குழுவில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை என்றும், கல்வியாளர்களும் ஏனைய நிபுணர்களுமே இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

பாதுகாப்புப் படைகளிலும், காவல்துறையிலும் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாகவும், அந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் ஜெனரல் சேனநாயக்க தெரிவித்தார்.

நிலையான பொருளாதாரத்தை உறுதி செய்வதும், நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதும் தனது கொள்கையாக இருக்கும் என்றும், அரசியலமைப்பு சீர்திருத்தங்களும் தொடரப்படும் என்றும், புதிய அரசியலமைப்பிற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும்  ஜெனரல் சேனநாயக்க கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *