மேலும்

மொட்டுக்கு ஆதரவு அளிக்க முடியாது – மைத்திரி திட்டவட்டம்

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கத் தயார் என்ற போதும், மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் அவருக்கு ஆதரவு சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் அளிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருநாகலவில் நேற்று நடந்த சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

”அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனியாக அல்லாமல், கூட்டணி அமைத்துப் போட்டியிடும்.

கட்சிக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது அதன் ஆதரவாளர்களின் எதிர்காலத்தை இழக்கும் எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி  தயாராக இல்லை.

அதிபர் தேர்தலில் பொதுச்சின்னத்தில் போட்டியிட பொதுஜன பெரமுன இணங்கினால் தான், அதன் வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடியும்.

மொட்டு சின்னத்துக்கு ஆதரவளிக்க முடியாது என்பதை பொதுஜன பெரமுனவுக்கு தெரிவித்து விட்டோம்.

பல சந்தர்ப்பங்களில் சுதந்திரக் கட்சி பின்னடைவுகளை சந்தித்திருக்கிறது. எனினும் மக்கள் ஆதரவை அது இழந்து விடவில்லை.

இப்போது சுதந்திரக் கட்சி பலவீனமாக உள்ளது. ஆனாலும், அடுத்த அதிபர் ஆகப் போகிறவருக்கு சுதந்திரக் கட்சியின் ஆதரவு தேவை. அடுத்த அதிபரை தீர்மானிக்கப் போவது சுதந்திரக் கட்சி தான்.

தற்போதைய அரசியலமைப்பின் படி அதிபரை விட அடுத்த நாடாளுமன்றத்துக்கே அதிகாரம் இருக்கும்.

எனவே, 2020 தேர்தலில் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைப் பெறுவதே சுதந்திரக் கட்சியின் முக்கியமான இலக்காக இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *