மேலும்

கோத்தாவின் குடியுரிமை செல்லுபடியானதா? – மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையின் செல்லுபடித்தன்மையை சவாலுக்குட்படுத்தும், ரிட் மனுவொன்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பான முழுமையான விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. எனினும், நொவம்பர் 16 அதிபர் தேர்தலில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராகக் கருதப்படும் கோத்தாபய ராஜபக்சவுக்கு சிறிலங்கா குடியுரிமை எப்போதாவது சட்டபூர்வமாக வழங்கப்பட்டதா என்பது பற்றிய கேள்விகளை எழுப்பும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், கோத்தாபய ராஜபக்ச  ஒரு சிறிலங்கா குடிமகன் என்று கூறுவதைத் தடுக்கும் வகையில், இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறும், கோரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த மனுவை சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட, பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

கோத்தாபய ராஜபக்ச சிறிலங்காவின் குடிமகன் அல்ல என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என புரவெசி பலய அமைப்பின் அமைப்பாளர், காமினி வியாங்கொட தெரிவித்துள்ளார்

“எங்களை ஆள விரும்புவோர், சட்டத்தின் ஆட்சியை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதற்கு முழு நாட்டிற்கும் ஒரு முன்மாதிரியானவராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

மனுதாரர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றிடம், இடைக்கால நிவாரணம் கோருகின்றனர்.

இந்த மனு தொடர்பாக, கோத்தாபய ராஜபக்சவின் சட்ட விவகாரங்களைக் கையாளும் குழுவின் தலைவரான சட்டவாளர் அலி சப்ரியிடம் கேள்வி எழுப்பிய போது, தற்போது இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது என கூறியுள்ளார்.

எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இதுதொடர்பான அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது என்பதை, கோத்தாபய ராஜபக்சவின்  பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல உறுதிப்படுத்தியுள்ளார்.

“நீதிமன்ற அறிவிப்பு கிடைத்துள்ளது. அவர்கள் கோத்தாபயவை கண்டு எவ்வளவு அஞ்சுகிறார்கள் என்பது தெரிகிறது.

அவரது வேட்புமனுவைத் தடுக்க முயற்சிக்கும்போது, அவர்கள் ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள்.

அவர்கள் அவரை மிகவும் வலிமையான வேட்பாளராக கருதுகின்றனர், அவருடன் போட்டியிட முடியாது என நம்புகிறார்கள்” என்று அவர் கூறினார்.

எனினும், கோத்தாபய ராஜபக்ச ஒரு சட்டபூர்வமான சிறிலங்கா குடிமகன் அல்ல என்ற குற்றச்சாட்டுக்கு ரம்புக்வெல்ல எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *