மேலும்

கிடுக்கியில் சிக்கிய அமெரிக்கா

2015இல், ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர், இலங்கையில் அமெரிக்காவின் நலன்களை உறுதிப்படுத்துவதில், அந்த நாடு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

கடந்த நான்கரை ஆண்டுகளில், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு நெருக்கமடைந்திருந்த போதும், இப்போதைய சூழல் அதற்கு நேர்மாறானது.

இந்தச் சூழலை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. அமெரிக்க – இலங்கை உறவுகளின் நெருக்கத்தை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த சீனா போன்ற நாடுகளுக்கு, அமெரிக்கா கிடுக்கிப் பிடிக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் இந்தச் சூழல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அமெரிக்க- இலங்கை உறவுகளின் நெருக்கத்துக்கு, 2018 ஒக்ரோபர் 26 வரை எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை அமெரிக்கா, தனக்குச் சார்பான வகையில் மிகசாதுரியமாகவே கையாண்டு வந்தது.

கடந்த ஆண்டு, ஐதேக அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு, மகிந்தவுடன் இணைந்து ஆட்சியைப் பகிர்ந்து கொள்ள, மைத்திரிபால சிறிசேன முடிவு செய்த பின்னர் தான், அமெரிக்காவுக்கு சிக்கல் எழுந்தது.

அந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுத்தது. அழுத்தங்களையும் பிரயோகித்தது. அதனால், மைத்திரி- மகிந்த அணிகள் அமெரிக்கா மற்றும் மேற்குலகின் மீது கடுமையான எரிச்சடைந்தன. 

அந்த ஆட்சிக்கவிழ்ப்பு தோல்வியடைந்து, மீண்டும் ரணில் விக்ரமசிங்க  அரசாங்கம் பதவியேற்ற போதும், அமெரிக்கா எதிர்பார்த்த சூழல் உருவாகவில்லை.

மைத்திரி ஒரு பக்கமும், ரணில் ஒரு பக்கமுமாக அரசாங்கத்தை இழுக்க முனைந்த போது, கொழும்பில் இரட்டை அதிகார மையம் தோன்றியது.  இதுதான் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது.

மைத்திரிபால சிறிசேன அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்திக் கொள்வதுடன், சீனா, ரஷ்யாவின் பக்கம் சார்ந்து செல்ல முற்படுகிறார்.

ரணில் விக்ரமசிங்க அரசாங்கம், அமெரிக்காவின் பக்கம் நிற்கிறது.

இப்போது, ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை ஆட்சிக்கவிழ்ப்பில் இருந்து பாதுகாத்த அமெரிக்காவினால், அதன் பயன்களை முழுமையாக எட்ட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதாவது அமெரிக்க நலன்களை இலங்கையில் உறுதிப்படுத்துவதற்கான முழுமையான வேலைத்திட்டங்களையும் எதிர்பார்த்தது போன்று முன்னெடுக்க முடியாமல் முடங்கியிருக்கிறது.

குறிப்பாக, இலங்கையுடன் பாதுகாப்பு உடன்பாடுகளை செய்து கொள்ள முடியாத நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருக்கும் நிலையில், அவருக்குத் தெரியாமல் அல்லது அவரது அனுமதியை பெறாமல் எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ள முடியாது.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, அமெரிக்காவுடன் எந்த உடன்பாட்டுக்கும் செல்வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்ற உறுதியான முடிவை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.

இன்னும் சில மாதங்கள் தான் இந்த அரசாங்கம் பதவியில் இருக்கப் போகின்ற நிலையில், இலங்கையுடன் வருகை படைகள் உடன்பாட்டை செய்து கொள்வதற்கான சாத்தியங்கள் குறுகிக் கொண்டு வருகின்றன.

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் இந்த உடன்பாடு குறித்து அமெரிக்கா பேச்சுக்களை நடத்தி வந்தாலும், உடன்பாட்டில் கையெழுத்திட முடியாத நிலையே இருப்பதால், அடுத்த அரசாங்கம் பதவிக்கு வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அடுத்த அரசாங்கம் அமெரிக்காவுக்கு சாதகமானதாக – அமெரிக்க நலன்களில் ஈடுபாடு கொண்டதாக இருக்குமா என்பது தான் கேள்வி.

எனவே தான், அடுத்த சில மாதங்களுக்குள் எப்படியாவது, வருகைப் படைகள் உடன்பாட்டில் கையெழுதிட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது,

அண்மைக்காலங்களில் சோபா, மிலேனியம் சவால் நிதிய உடன்பாடுகள் தொடர்பான வெளியாகி வரும் செய்திகள் அமெரிக்காவை கடுமையாக குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த உடன்பாடுகளால் இலங்கையில் அமெரிக்கா தளது தளத்தை அமைக்கப் போகிறது, இலங்கைக்கு அமெரிக்கப் படைகள் தங்கு தடையின்றி எந்த ஆவணங்களும் இன்றி வந்து செல்லப் போகின்றன. நாட்டின் இறைமை பறிபோகப் போகிறது. அமெரிக்க படைகள் தவறு செய்தாலும், தண்டிக்க முடியாத நிலை ஏற்படும்- என்றெல்லாம்,  வெளியாகும் செய்திகளும், கிளப்பப்படும் புரளிகளும் அமெரிக்காவை தடுமாறச் செய்திருக்கிறது.

தற்போதைய அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இந்த விவகாரத்தை எந்தளவுக்கு வினைத்திறனுடன் கையாள முற்பட்டாலும், அவரால் அதில் வெற்றிபெற முடியவில்லை என்பதையே இந்த விவகாரத்தில் அமெரிக்கா எதிர்கொள்ளுகின்ற நெருக்கடியின் மூலம் உணர முடிகிறது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பதவியில் இருந்த அமெரிக்க தூதுவர்களான றொபேர்ட் ஓ பிளேக், பற்றீசியா புரெனிஸ், மிச்சேல் ஜே சிசன் போன்றவர்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அமெரிக்க நலன்களை உறுதிப்படுத்துவதில் விட்டுக் கொடுப்பை காண்பிக்கவில்லை.

அதற்குப் பின்னர் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அமெரிக்க தூதுவராக இருந்த அதுல் கெசாப், சிக்கலின்றி அமெரிக்க திட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருந்தார்.

இரட்டை அதிகார மையம் தோன்றிய சூழலில் இலங்கையில் பதவியேற்ற அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இந்த விவகாரத்தைக் கையாளுவதற்கு தடுமாறுகிறார் என்பதை தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

சோபா மற்றும் மிலேனியம் சவால் நிதிய உடன்பாடுகள் தொடர்பான உண்மை நிலையை விளங்கப்படுத்த அவர் ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் பயன்படுத்தினாலும், அவை அவருக்கு கைகொடுக்கவில்லை என்றே தெரிகிறது,

மகிந்த அணியினர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாய்வழியாகப் பரப்பும் செய்திகள், வதந்திகளுக்கு முன்பாக, அமெரிக்க தூதுவரினதும், தூதரக பேச்சாளர்களினதும் நீண்ட விளக்கங்கள் எடுபடவில்லை என்பதே உண்மை.

சாதாரண மக்களின் சந்தேகங்களையும், இது தொடர்பாக உள்ள கேள்விகளையும் தீர்த்து வைப்பதற்கு அமெரிக்க தூதுவர் எடுத்துள்ள முயற்சிகள் எல்லாமே பெரிய பயனைக் கொடுக்கவில்லை.

அதனால் தான் கடந்த புதன்கிழமை, அமெரிக்க தூதுவர் பேஸ்புக் மூலம், ஒரு நேரலை கேள்வி- பதில் நிகழ்வுக்கு ஒழுங்கு செய்திருந்தார்.

அதில், அவர் சோபா உடன்பாடு பற்றிய கேள்விகளுக்கும், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் தொடர்பான சந்தேகங்களுக்குமே முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.

2009,இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் இலங்கை இராணுவம் ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை கொன்றுள்ளது, வல்லுறவுக்குட்படுத்தியுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூறியுள்ள நிலையில், தமிழ்மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க அமெரிக்க எவ்வாறு பணியாற்றப் போகிறது, எதிர்காலத்தில் இதுபோன்று நிகழாமல் தடுப்பதை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது என்று முகமட் சுபைர் என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால் அந்தக் கேள்விக்கோ அதுபோன்ற ஏனைய கேள்விகளுக்கோ அமெரிக்க தூதுவர் முக்கியத்துவம் கொடுக்கவோ, பதிலளிக்கவோ இல்லை.

அமெரிக்க தூதுவரின் முழுக் கவனமும், சோபா, மிலேனியம் சவால் உடன்பாடுகள் மற்றும் அமெரிக்க படைகள், தளம் தொடர்பாக வெளியாகும் செய்திகளுக்கு மறப்புத் தெரிவிப்பதிலும், விளக்கம் கொடுப்பதிலும் தான் இருந்தது.

அதற்கு அப்பால், தற்போது இலங்கையுடன் உள்ள உறவுகளை சீர்குலைக்கக் கூடிய கேள்விகளுக்கோ, சந்தேகங்களுக்கோ அவர் பதிலளிக்க விரும்பவில்லை.

இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கை பற்றி அவர் தெளிவுபடுத்த இந்த நேரத்தில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை இதன் மூலம் உணர முடிவதுடன், இப்போதைய நெருக்கடிகளை சமாளிப்பதில் அமெரிக்கா திணறிக் கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

அமெரிக்க தூதுவர் திரும்பத் திரும்ப, இலங்கையில் தளம் அமைக்கும் திட்டம் இல்லை, இலங்கையின் இறைமைக்கு ஆபத்து ஏற்படாது என்பதை கிளிப்பிள்ளை போலவே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அச்சு ஊடகங்களிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் எதனை அமெரிக்க தூதுவர் விளங்கப்படுத்திக் கொண்டிருந்தாரோ- அதனையே தான், சமூக ஊடக கேள்வி – பதில் நிகழ்விலும் கூறியிருக்கிறார்.

அமெரிக்க தூதுவரின் இந்த அணுகுமுறையும் பதிலளித்துள்ள பாங்கும், இந்த சிக்கலை சமாளிப்பதற்கான புதிய உத்தி ஒன்றை வகுக்க முடியாமல் அமெரிக்க திணறுகிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் அமெரிக்க தலையீடுகள் குறித்த அச்சங்களை தணிப்பதற்கான அமெரிக்க மூலோபாயம் எதுவும் வெற்றியளிக்கவில்லை. இது இலங்கையில் அமெரிக்காவின் நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் தோல்வியை ஏற்படுத்தக் கூடும்.

தாங்கள் எந்த கட்சியையும் ஆட்சிக்கு கொண்டு வர முனையவில்லை என்றும், மக்களால் தெரிவு செய்யப்படும் அடுத்த அரசாங்கம், தாம் ஏற்கனவே செய்துள்ள உடன்பாடுகளுடன் இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும் தான் அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

2015 ஆட்சிமாற்றத்தில் அமெரிக்கா கணிசமான பாத்திரத்தை வகித்திருந்தது, ஆனால் 2019 ஜனாதிபதி தேர்தலிலோ, அதையடுத்து நிகழப் போகும் பொதுத்தேர்தலிலோ, அமெரிக்காவின் தலையீடுகள் பெருமளவில் எதிர்பார்க்க முடியாத ஒன்றாகவே மாறிவருகிறது.

ஏனெனில், தற்பபோதைய நிலையில் இலங்கையுடனான உறவுகளை அமெரிக்கா இன்னும் வலுப்படுத்திக் கொள்வதை விட, இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்கே எத்தனிக்கிறது.

அடுத்த அரசாங்கத்திலும் அது தொடர வேண்டும் என்றால், அமெரிக்கா தேர்தல்களில் எந்தத் தலையீடுகளையும் செய்யாமல் ஒதுங்கியிருக்க வேண்டியிருக்கும்.

-ஹரிகரன்
வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *