மேலும்

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய அதிநவீன கண்காணிப்பு விமானத்தினால் சர்ச்சை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள சிறப்புத் தேவைகளுக்கான அதிநவீன விமானம் தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

தென்னாபிரிக்க நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான, Spectrum Air, ZS-ASN  தயாரிப்பான, The Basler BT-67 விமானம், விமானிகள் உள்ளிட்ட மூன்று பணியாளர்களுடன் கடந்த சனிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென தரையிறக்கப்பட்டது.

அவுஸ்ரேலியாவில் கண்காணிப்பு பணிகளை முடித்துக் கொண்டு மும்பை நோக்கி பயணிக்கும் வழியிலேயே, இந்த விமானம் தரையிறக்கப்பட்டது.

1000 மீற்றர் உயரத்தில் இருந்து தரையை துல்லியமாக படம் பிடிக்கவும், அளவீடுகளைச் செய்து வரைபடங்களை உருவாக்கக் கூடிய நவீன வசதிகளைக் கொண்ட இந்த விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க,

“இந்தோனேசியாவில் இருந்து மும்பை சென்று கொண்டிருக்கும் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காகவும், தொழில்நுட்ப சிக்கல்களை தீர்ப்பதற்காகவும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இது முற்றிலும் வழக்கமான நடைமுறையாகும். இந்த விமானத்தில் வந்த தென்னாபிரிக்க பணியாளர்கள் மூவரும் தற்போது தாஜ் சமுத்ரா விடுதியில் தங்கியுள்ளனர்.

உண்மையில், ஏப்ரல் 21 தாக்குதல்களுக்குப் பின்னர், இத்தகைய விமானம் கட்டுநாயக்கவில் தரையிறங்கியது, நல்ல வாய்ப்பாகும்.

விமானம் தரையிறக்கப்பட்ட விடயத்தில் எந்த சட்ட மற்றும் ஒழுங்குமுறை மீறல்களும் இடம்பெறவில்லை. தரையிறக்குவதற்கு விமானப் பணியாளர்களுக்கு தேவையான நுழைவிசைவு வழங்கப்பட்டுள்ளது. இந்த விமானம் இன்று புறப்பட்டுச் செல்லவுள்ளது.

இந்த விமானத்தில் எந்தவொரு புவியியல் கண்காணிப்பு கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கவில்லை. அது முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விமானம் ஆய்வு செய்யப்படவில்லை என்று சிறிலங்காவின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார்.

“இந்த விமானம் ஆய்வு எதுவும் செய்யப்படவில்லை, விமானத்தில் எந்த கண்காணிப்புக் கருவிகளும் இல்லை என்று, அதன் பணியாளர்கள் வழங்கிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டே கூறப்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *