மேலும்

தெரிவுக்குழுவில் சிறிலங்கா இராணுவத் தளபதி இரகசிய சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு, ஊடகவியலாளர்களை வெளியேற்றி விட்டு, சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளது.

இன்று பிற்பகல் 2.15 மணியளவில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு ஆரம்பமானது. முதலில், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க சாட்சியமளித்தார்.

ஊடகங்களின் முன்னிலையில் அவர் சாட்சியம் அளித்தார். எனினும், சுமார் 10 நிமிடங்களின் பின்னர், சாட்சியங்கள் முக்கியமான தகவல்களை உள்ளடக்கியிருக்கலாம் என்பதால், ஊடகங்களை வெளியேறுமாறு தெரிவுக்குழு கேட்டுக் கொண்டது.

ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த போது, இராணுவத் தளபதியின் சாட்சியத்தின் முதல்  சில நிமிடங்களில்,   புதிய பாதுகாப்பு செயலர் மற்றும் புதிய தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் நியமனங்களைத் தொடர்ந்து, சிறிலங்கா புலனாய்வுத்துறை எவ்வாறு பலப்படுத்தப்பட்டது என்பது குறித்து விளக்கியிருந்தார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் முடிந்து விட்டது என்று யாரும் கூற முடியாது. அது தவறானது. நிலைமை அடங்கியிருந்தாலும், எப்போதும் ‘தனி ஓநாய்’ தாக்குதலுக்கான வாய்ப்பு உள்ளது என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அத்துடன், தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தனக்கு அழுத்தங்களைக் கொடுக்கவில்லை என்றும், அவர் கூறினார்.

ஏப்ரல் மாதம் 26ஆம் நாள், இஷான் அஹமட் என்ற நபர் தெகிவளை பிர​தசத்தில் கைது செய்யப்பட்ட பின்னர், றிசாட் பதியூதீன் தொலைபேசி மூலம் 3 தடவைகள் தன்னை அழைத்து, இஷான் அஹமட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்று மாத்திரமே தன்னிடம் வினவியதாகவும்  தெரிவித்துள்ளார்.

இன்றைய அமர்வில், இரண்டாவதாக றிசாத் பதியுதீனின் சாட்சியம் பெறப்படவிருந்த போதும், இன்றைய அமர்வை தெரிவுக்குழு முன்கூட்டியே முடித்துக் கொண்டதால், அவரிடம் நாளை சாட்சியம் பெறப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *