மேலும்

ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்

ரஷ்யாவுடனான அனைத்து பாதுகாப்பு தொடர்புகளையும் கைவிடுமாறு, சிறிலங்காவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று காலை ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அமெரிக்காவுடன், ஏற்கனவே, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாட்டில் சிறிலங்கா கையெடுத்திட்டுள்ள நிலையில், சோபா உடன்பாட்டில் கையெழுத்திடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ரஷ்யாவுடனான அனைத்து பாதுகாப்பு தொடர்புகளையும் கைவிடுமாறு, அமெரிக்கா எம்மிடம் கோரியிருந்தது.

19ஆவது திருத்தம் நீக்கப்பட வேண்டும்

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, 19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட வேண்டும். அது நாட்டுக்கு ஒரு சாபமாக மாறி விட்டது. இந்த அரசியலமைப்பு திருத்தமே, நாட்டில் உறுதியற்ற அரசியல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

19 வது திருத்தச் சட்டத்தை, சட்ட வல்லுநர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டதா அல்லது ஒரு அறிவில்லாத கூட்டத்தினரால் தயாரிக்கப்பட்டதா  என்று எனக்கு சந்தேகம் உள்ளது.

சில அரச சார்பற்ற நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமையவே, திருத்தங்கள் வரையப்பட்டுள்ளன.

அதிபர் தேர்தலில் போட்டியா?

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கப் போகும் எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

அதிபர் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னரே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு கருத்துக்கணிப்பை நடத்தப் போவதாக கூறப்படுவதெல்லாம் பொய். அவ்வாறான எந்த முடிவையும் நான் எடுக்கவில்லை.

தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளியேன்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்பாக, சாட்சியமளிக்க வருமாறு எனக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.

தெரிவுக்குழு அழைப்பு விடுத்தாலும் சாட்சியமளிக்கச் செல்லமாட்டேன்.  தெரிவுக்குழு என்பது, அலரி மாளிகையில் இருந்து தயாரிக்கப்பட்ட  ஒரு நாடகம் தான்.

50 பேருடன் செல்லவில்லை

கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட  பயணங்களின் போது, 10 பேருக்கு மேல் அழைத்துச் சென்றதில்லை.

அண்மையில் தஜிகிஜஸ்தானுக்கு நான் மேற்கொண்ட பயணத்தின் போது, 50 பேரை அழைத்துச் சென்றதாக கூறப்பட்டது முற்றிலும் பொய்யான தகவல்” என்றும் அவர் கூறினார்.

ஒரு கருத்து “ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்”

  1. நடேசன் திரு
    நடேசன் திரு says:

    அப்போ, ஒங்களுக்கு இறைமை என்று ஒன்று கிடையவே கிடையாது. ஆனால், ஒரு மூலையில் வாழ்ந்தாலும், முழு இலங்கைத் திருநாட்டுக்கும் இறைமை என்கிற ஒன்றை தனது வல்லமையால், தனது கைக்கிக்குள்ளே வைத்திருந்தார் ஒருவர். அவரை நினைத்துப்பாருங்கள். உங்களுக்கும் இலங்கையன் என்கிற திமிர் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *