மேலும்

முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் பதவியேற்குமாறு பௌத்த பீடங்கள் அழைப்பு

பதவியில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள், மீண்டும் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுமாறும், நாட்டு மக்களுக்கான கடமையை நிறைவேற்றுமாறும், மூன்று பௌத்த பீடங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

மூன்று பௌத்த பீடங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும், மகாசங்க கூட்டம், நேற்று கண்டியில் இடம்பெற்றது.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மூன்று பௌத்த பீடங்களினதும், பதிவாளர்களும், மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் அனுநாயக்கர்களும், கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் பின்னர், மல்வத்த பீடத்தின் அனுநாயக்கர், ராஜகீன பண்டித நியங்கொட விஜித சிறி தேரர், ஊடகங்களிடம் பேசிய போது, நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டதாக கூறினார்.

“அமைச்சர் பதவிகளில் இருந்து விலகிய அனைவரும்  தங்கள் பொறுப்புகள் ஏற்று தங்கள் கடமைகளை நிறைவேற்றுமாறு கோருகிறோம்.

எந்தவொரு முக்கியமான அரசியல்வாதி அல்லது அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால், அவர்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்  நிறுவனங்களுக்கு  ஒத்துழைக்க வேண்டும்.

நாட்டில் உள்ள மற்ற சமூகங்களுடன் இணக்கமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களை வெறுப்புடனோ,  விரோதத்துடனோ பார்க்கவில்லை..  இந்த நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும், ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு காவல்துறை குழுவிடம் றிசாத்துக்கு எதிராக முதல் முறைப்பாடு

சிறப்பு காவல்துறை குழுவிடம், முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான முதலாவது முறைப்பாடு நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன், முன்னாள் மாகாண ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு காவல்துறை தலைமையகத்தில், மூன்று பேர் கொண்ட காவல்துறை குழு நேற்றுமுன்தனம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காவல்துறை குழுவிடம் நேற்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் முறைப்பாடு செய்துள்ளார்.

அமைச்சராக இருந்து றிசாத் பதியுதீன் சிங்கள வணிகர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என்றும், சதொச ஊடாக மனித பாவனைக்கு ஏற்றதில்லாத பொருட்களை விநியோகித்தார் என்றும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *