தெற்காசியாவின் நட்சத்திரம் – 1
இந்து சமுத்திரம் சர்வதேச பூகோளஅரசியலின் மையமாக உருவெடுத்துள்ளது. இப் பிராந்தியத்தின் நாடுகள் ஒவொன்றும் வல்லரசுகளின் அரசியல் களமாக இன்று பார்க்கப்படுகிறது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தம்மகத்தே கைப்பற்றும் வல்லரசுகளின் போட்டிகளில் சிக்கி உள்ள நாடுகளில் சிறிலங்கா முதன்மை இடம் வகிக்கிறது.
கொந்தளிப்பு மிகுந்த அரசியல் அலைகளை சிறிய இந்து சமுத்திர தீவான இலங்கையிலும் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக தோற்றுவித்த வண்ணம் இருப்பது குறிப்பிடதக்கதாகும்.
பலம் வாய்ந்த நாடுகள், இந்து சமுத்திரத்தில் உள்ள சிறிலங்கா போன்ற சிறிய நாடுகள் மீது வரலாற்று தொடர்பு உரிமை கோரல்கள், தமது போட்டி வல்லரசுகளின் நகர்வுகள் ஆகியவற்றை காரணமாக கொண்டு நாட்டின் பல்வேறுபகுதிகளிலும் நிலை எடுக்க தலைப்பட்டுள்ளன.
இந்த அரசியல் கொந்தளிப்பு அலைகளுக்கு மத்தியில் உறுதியான சமூக பொருளாதார அரசியல் விடுதலை முன்னேற்றங்களை தேடுவதில் இலங்கைத்தீவில் வாழும் தமிழ் சமுதாயம் மிக கடுமையான சவால்களை எதிர் கொண்டுள்ளது.
இந்த தீவிற்குள் சிறிலங்கா அரசின் நில ஆக்கிரமிப்பு கொள்கை திட்டமிடல்கள், முன் முயற்சிகள் உட்பட பிராந்திய அரசுகளின் மூலோபாய தேவைகள், சர்வதேசத்தின் வர்த்தக, இராணுவ தேவைகள் ஆகிய மூன்று முக்கிய சாவால்களில் மத்தியில் தமிழ் தேசம் சிக்குண்டு கிடக்கிறது.
தமிழ் தேசியம் தெற்காசியாவின் ஒரு முக்கியமான, பிராதானமான அலகாக இருக்கின்ற போதிலும் பிராந்திய, சர்வதேச முக்கியத்துவம் மீதான நோக்கு அதிகமாக கவனத்தில் எடுத்து கொள்ளப்படாது இருப்பதால் சர்வதேச அரசுகளின் பலம் தமிழ் தேசியத்தை ஒரு தரப்பாக பார்க்கும் தன்மை இல்லாத நிலை காணப்படுகிறது.
கடல் சார் வர்த்தக இராணுவ நகர்வுகளை தன்னகத்தே கொண்ட இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் துறைமுகங்கள் முக்கிய கவனத்திற்கு வந்திருக்கின்றன.
குறிப்பாக இலங்கைத்தீவின் கொழும்பு அம்பாந்தோட்டை, திருகோணமலை துறைமுகங்கள் பொருளாதார இராணுவ பலம் பொண்ட நாடுகள் மத்தியில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளன.
அம்பாந்தோட்டையும் கொழும்பும் ஏற்கனவே சீன வல்லரசின் நெருங்கிய கையாளுகைக்குள் உட்பட்டு விட்ட நிலையில் மீதமாக இருக்கும் திருகோணமலை மீதான பார்வை இன்று பல்வேறு வல்லரசு தரப்புகள் மத்தியிலும் வலுப்பெற்றுள்ளது.
இந்த பிராந்திய நிலை மற்றும் சர்வதேச அரசியல் நிலையை ஆகியவற்றை மையமாக வைத்து இங்கே ஆய்வு செய்யப்படுகிறது.
பிராந்திய முக்கியத்துவம்
இந்து சமுத்திரப் பிராந்தியம் இலங்கையின் மேலே இந்தியாவையும் பாகிஸ்தான், ஈரான் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், யேமன், சோமாலியா, கென்யா , தன்சானியா, மொசாம்பிக் , தென்ஆபிரிக்கா என ஒருபகுதியிலும் மறுபகுதியில் பங்களாதேசம், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்புர் இந்தோனேசியா , அவுஸ்ரேலியா ஆகியவற்றுடன் நடுவே மாலைதீவு மொறீசியஸ், சிசெல்ஸ் என மேலும் பல சிறு தீவுக் கூட்டங்களையும் கொண்டுள்ளது.
இந்த பிராந்தியத்தின் இன்றைய முக்கியத்துவத்தை கொண்டு நோக்குவதானால், பொருளாதார வளர்ச்சியின் வேகத்தால் இந்த நாடுகளில் அதிகரித்த முதலீட்டாளர்கள் சிறு உற்பத்திகளையும் பல்தேசிய கம்பனிகள் தமது சேவைசார் தொலத் தொடர்பு நிறுவனங்களையும் தமது வியாபார தேவைகளுக்கு ஏற்ற வகையில் செயற்படுத்தி வருகின்றனர்.
உலகின் எண்பது சதவீது எரிபொருள் இந்து சமுத்திர பிராந்தியத்தின் ஊடாகவே பயணிக்கின்றது. இதனால் கிழக்கு மேற்கு வல்வரசு நாடுகள் அதிகம் நாட்டம் கொண்ட பிரதேசமாக உள்ளது.
இந்தியா ஒரு பிராந்திய வல்லரசாக உள்ளதால் அதன் மேலாண்மை கொள்ள துடிக்கும் இதர வல்லரசுகளின் தலையீடுகள் காரணமாக சிறிய நாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்தப் பிராந்தியத்தை தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க விரும்பும் இந்தியா, தனது தனித்துவமான அதிக்கத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கக“ கூடிய எந்த வல்வரசையும் இப்பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளுடன் தொடர்பு வைத்திருப்பதை தனது பிராந்திய வட்டகையின் சவாலாக கருதுகிறது.
தற்போது சீன வளர்ச்சியின் காரணமாக அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து இநதியா தனது பிராந்தியத்தில் செயலாற்றுகிறது. இருந்த போதிலும் இந்திய வளர்ச்சிப் போக்கை அடுத்த இருபது வருடங்களுக்கு பின்பு கணிப்பீடு செய்துள்ள பல்வேறு தரவுகளின் அடிப்படையில், சர்வதேச அரங்கில் அரசியல் பொருளாதார விதியை நிர்ணயம் செய்யக் கூடிய ஒரு பொறுப்பில் இந்தியா நகர்ச்சி பெறும் பொழுது, தற்போது நேச அணியில் உள்ள நாடுகள் யாவும் ஒரே பார்வையை கொண்டிருக்கும் என்பது எதிர்பார்க்க முடியாதது ஆகும் .
அந்த காலப்பகுதியில் அமெரிக்கா இந்தியாவுடன் போட்டி நாடாக மாறும் தன்மையை எதிர்பார்க்கலாம் என்பது இந்த தகவல்களின் முடிவில் கண்ட எடுகோள்களாகும்.
சுதந்திரமான கடற்போக்கவரத்து என்பதை சாக்காக வைத்து இந்திய பாதுகாப்பு வட்டகைக்குள் அமைவை பெற்றிருக்கக் கூடிய சிறிய தீவுகள் வேறு பிராந்திய வல்லரசுகளுடன் குறிப்பாக சீனாவுடன் வியாபார அரச கட்டுமான அபிவிருத்தி ஒப்பந்தங்களை செய்து கொள்கின்றன. இந்தியா இந்த ஒப்பந்தங்கள் குறித்து தலையீடுகள் செய்யுமாயின் தம்மை இந்தியா எளியாரை கொடுமை செய்யும் பாணியில் வெளியுறவு கொள்கை வகுத்துள்ளதாக குற்றம் சுமத்தும் மனோநிலையை கொண்டுள்ளன.
இருந்த போதிலும் சிறிய நாடுகளும் தமது நியாயத்தை பேணும் வகையில் தாம் பொருளாதார முயற்சிகள் ஆரம்பிக்கும் போது முதல் தெரிவை இந்தியாவிடம் சமர்ப்பிக்கின்ற போதிலும் இந்தியாவின் அயல் நாடுகளின் மீதான பொருளாதார முதலீட்டு நாட்டம் குறைவாக இருப்பதால் தான், சீனாவிடம் செல்வதாக சிறிய நாடுகள் காரணம் சொல்வது அவற்றின் பொதுவான அயலுறவுக் கொள்கையாக உள்ளது.
இதற்கு நல்ல உதாரணமாக அம்பாந்தோட்டை துறைமுக கட்டுமான திட்டம் ஆரம்பித்த போது இந்திய மத்திய அரசிடமே முதலில் எடுத்து சென்றதாக சிறிலங்கா அரசியல்வாதிகளும் மாலைதீவில் விமான நிலையத்துக்கும் பிரதான நகருக்கும் இடையிலான பாலம் அமைக்கும் போது சீன நிறுவனங்களை நாடுவதற்கு முன்பு இந்திய மத்திய அரசிடமே சென்றதாக மாலைதீவும் கூறி வருவது குறிப்பிட தக்கதாகும்.
இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு சீனா, சிறிய தீவுகளிற்கு பொருளாதார உதவிகள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதுவும், திருப்பி அடைக்க முடியாத அதிக பெறுமதி மிக்க பொருளாதார கட்டமைப்பு போக்குவரத்து சக்திவள திட்டங்களை நோக்கிய முதலீடுகளில் இறங்குவதும், இதன் மூலம் கடன் பொறிக்குள் இந்த சிறிய நாடுகளை வீழ்த்துவதுவும் கடன் பொறி இராஜதந்திரம் என மேலை நாடுகளால் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த வகையிலேயே அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தன்வசப்படுத்தி கொண்டது என்பதுவும் அறிந்ததே.
கொழும்பு அரசியல் தலைவர்களின் பார்வையில் சிறிலங்காவின் பொருளாதார முன்னேற்றம் சீன முதலீடுகள் சார்ந்ததாகவே இருக்கிறது. இதன் பொருட்டு இந்து சமுத்திரத்தில் சுதந்திரமான கப்பற்பாதை பேணப்பட வேண்டும் என்ற விவாதத்தை முன்நிறுத்தி, சீன கடன் பளுவை ஈடு செய்தல் என்ற போர்வையில் சீனாவிடம் அம்பாந்தோட்டை துறை முகத்தை அடுத்த 70வருடங்களுக்க ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு கொடுத்து விட்டது.
பிராந்தியத்தில் இலங்கை
சிறிலங்கா அரசியல்வாதிகளின் வாக்குறுதி இராஜதந்திரம் இந்து சமுத்திர பிராந்திய அரசியலிலும் இதுவரையில் வெற்றி தருவதாகவே இருந்து வந்திருக்கிறது. ஏனெனில் இந்தியா நோக்கிய பார்வையில் சிறிலங்காவின் கடற்பிராந்தியத்தின் எந்தப் பகுதியும் இந்திய பாதுகாப்புக்கு எதிரானதாக இருக்காது என்று வாக்குறுதி அளித்த அதே வேளை , அம்பாந்தோட்டையை எழுபது வருட குத்தகைக்கு கொடுத்த சிறிலங்கா அரசு கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியில் கடல் நோக்கி மண் இட்டு நிரப்பப்பட்டு துறைமுக நகரம் அமைக்கும் திட்டத்தில் 60 தொடக்கம் எழுபது சத வீத சீன துறைமுக அபிவிருத்தி நிறுவனத்தினால் கையாளப்படும் என்பது சிறிலங்கா பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க வியட்நாம் ஹனோய் நகரில் இடம் பெற்ற இந்து சமுத்திர பிராந்திய மாநாட்டில் தெரிவித்த செய்தியாக உள்ளது.
இந்த நிலையில் வல்வரசுகள் பலவும் காட்டும் ஆர்வத்தை சிறிலங்கா வியாபார பாணியில் கையாள முனைகிறது. 2008 ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை சுமார் 28 நாடுகளில் இருந்து 450 கடற்கலன்கள் சிறிலங்காவிற்கு வந்து சென்றுள்ளன. அதிலும் 2017 ஆம் ஆண்டு மட்டும் வாரத்திற்கு ஒரு யுத்தகப்பல் வந்து சென்றதான பதிவுகள் உள்ளன.
வல்லரசுகளின் நகர்வுகளில் சிறிலங்கா மீது பொருளாதார அபிவிருத்தி நோக்கத்தை நோக்கியதான பார்வையை விட கேந்திர முக்கியத்துவம் கொண்ட இராணுவ மயமாக்கும் பார்வையையே அதிகம் கொண்டுள்ளன .
2009 ஆம் ஆண்டிருந்து சிறிலங்காவில் எந்தவித இராணுவ தாக்கதல்களும் இடம் பெறாத போதிலும் சிறிலங்காவின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாத்தல், தேசிய நலன் என பல்வேறு விடயங்களை காரணமாக கொண்டு போர்க்கப்பல்களையும், விமானங்களையம் பல நாடுகள் அன்பளிப்பாக கொடுத்துள்ளன அல்லது விற்பனை செய்துள்ளன
இந்த இராணுவ உதவிகள் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் சிறிலங்கா அரசின் இராணுவ கடற்படை விமானப்படைகளை வலுப்படுத்துவதில் வல்வரசுகள் பெரும் ஆர்வம் கொடுப்பதை காண கூடியதாக உள்ளது.
கடந்த வருடம் ஓகஸ்ட் நடுப்பகுதியில் அமெரிக்க வெளிநாட்டு இராணுவ நிதியிலிருந்து 39 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடையை அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதலுடன் சிறிலங்காஇராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல ஒரு நல்ல உண்மையான நண்பனாக கடந்த தசாப்தங்களில் இணைந்திருந்த நன்றிக்காக ஜூலைஇறுதியில் சீன தூதரக அதிகாரியும் இராணுவ கேணலுமான சூ ஜியாங்வெய் அவர்கள் சிறிலங்கா கடற்படைக்கு 054ஏ ரக போர்க்கப்பல் ஒன்றை வழங்கி இருந்தார். இதனை தொடர்ந்து அந்த படகை இயக்குவதற்கும் அதிலிருந்து இராணுவ பயிற்சிகளை பெற்று கொள்வதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மேலும் கடந்த வருட நடுப்பகுதியில் இந்தியாவும் சிறிலங்கா இராணுவத்தை நவீனமயப்படுத்தவதற்கு உதவ இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை வெளியிட்டிருந்தார். பிரித்தானியாவும் கூட இராணுவ உதவிகள் வழங்கி இருந்தது.
இந்த வகையில் சிறிலங்காவை இராணுவ ரீதியான கட்டமைப்பு களை வளப்படுத்தவதில் காட்டும் நேரடி ஊக்கம் பொருளாதார முதலீடுகளில் அதிகம் பொருட்படுத்தாத நிலைஉள்ளது.
மேலும் யுத்தத்திற்கு பின்னான காலப்பகுதியில் இலங்கையின் தென்பகுதியில் ஒட்டு மொத்த சமுதாயமும் ஏதோ ஒரு வகையில் இராணுவத்துடன் தொடர்புடையனவாக உள்ளன. யுத்த வெற்றிகளின் கொண்டாட்டங்கள் இராணுவத்தில் இருந்த இளைஞர்களை வீரர்களாக ஆக்கி உள்ளது, இதனால் இராணுவம் தனித்துவமான செல்வாக்கை பெற்றிருக்கிறது.
இராணுவ செல்வாக்கை கொண்டிருக்கம் சமூக கட்டமைப்பும் பௌத்த சிங்கள தேசியவாத சித்தாந்தத்தின் பின்புலத்துடன் சிறிலங்கா புதிய தொரு தோற்றம் பெற்றுவருவதை கவனிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த வகையில் சிறிலங்கா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவ முக்கியத்துவம் கொண்ட ஒரு தேசமாக பரிணமித்து வரும் அதேவேளை சிறிலங்கா ஒரு வல்வரசுகளின் அரசியல் களமாகவும் விரைவில் தமது இராணுவ நகர்வுகளை செய்யக் கூடிய ஒரு களமாகவும் ஆகிவருகிறதோ என்ற எண்ணப்பாடு உள்ளது.
இதற்குரிய வசதிகளை சிறிலங்காவில் உள்ள துறைமுகங்கள் கொண்டுள்ளன. முக்கியமாக திருகோணமலை இதில் அடுத்த கட்ட நகர்வை சிந்திக்க உள்ள துறைமுகமாக ஆய்வாளர்கள் கருத்து கொண்டுள்ளனர்.
-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி
மாறிவரும் உலக ஒழுங்கைப் புரிந்துகொள்ள ( அல்லது ஏற்றுக்கொள்ள ) தவறிய, இலங்கையின் போராட்டத் தமிழ்ச் சமூகமும். அந்தச் சமூகத்தைத் அரவணைத்துப் பயன்படுத்தத் தெரியாமல், இப்போ கோட்டை விட்டுவிட்டு விழிபிதுங்கி நிற்கும் தெற்காசியாவின் பெரியண்ணனும், ஒருவகையில் நவீன அரசியல் ராஜதந்திரத்தில் பலவீனமானவர்களே.