மேலும்

றோகண விஜேவீரவை முன்னிலைப்படுத்தக் கோரும் ஆட்கொணர்வு மனு நிராகரிப்பு

கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட ஜேவிபி தலைவர் றோகண விஜேவீரவை நீதிமன்றில் நிறுத்தக் கோரி, அவரது மனைவி மேன்முறையீட்டு நீதிமன்றில், சமர்ப்பித்திருந்த ஆட்கொணர்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சட்ட நடவடிக்கை கோரப்படாததைக் காரணம் காட்டி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தீபாலி விஜேசுந்தரவும், அர்ஜூன ஒபேசேகரவும் இந்த ஆட்கொணர்வு மனுவை நேற்று தள்ளுபடி செய்தனர்.

றோகண விஜேவீரவின் மனைவி சித்ராங்கனி விஜேசேகர தாக்கல் செய்த இந்த மனுவில் சட்டமா அதிபர், முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சிறில் ரணதுங்க, முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன, ஜெனரல் ஹமில்டன் வணசிங்க, ஜெனரல் சிசில் வைத்யரத்ன உள்ளிட்ட 10 பேர் எதிர்மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளதாக, சித்ராங்கனி விஜேவீரவின் சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

1989ஆம் ஆண்டு நொவம்பர் 12ஆம் நாள் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டதில் இருந்து. றோகண விஜேவீர காணாமல் போயுள்ளார் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *