மேலும்

அமைச்சர்கள் அரச நிதியைப் பயன்படுத்தத் தடை  – நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேறியது

சிறிலங்காவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள்  அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் 122 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வை  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

இந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள்  அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பிரேரணையை, நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்தார்.

இந்தப் பிரேரணை மீது நடத்தப்பட்ட விவாதத்தை அடுத்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது  122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.  எந்தவொரு வாக்கும் எதிராக அளிக்கப்படவில்லை.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில்,  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க பங்கேற்கவில்லை.

இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம், அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள், அவர்களின் அதிகாரிகளுக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு, அமைச்சுக்களின் செயலர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டுப் பயணங்கள், ஏனைய சலுகைகள், வசதிகளுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்தவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தின் அமர்வை எதிர்வரும் டிசெம்பர் 05ஆம் நாளுக்கு, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஒத்திவைத்தார்.

அதேவேளை, நேற்று பிரதமரின் செயலகத்துக்கான நிதியைக் கட்டுப்படுத்துவதற்கும், இன்று அமைச்சர்கள் அரச நிதியைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்தும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிராகரித்துள்ளது.

அரசியலமைப்பின் படி, நிதி தொடர்பான பிரேரணைகளை, அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட பின்னரே, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என்றும் இத்தகைய பிரேரரணைகளை அமைச்சர் ஒருவரே முன்வைக்கலாம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதற்கு அதிகாரம் கிடையாது என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *