மேலும்

இந்தியாவும் சீனாவும் மோதும் ஆசியாவுக்கான போர்

சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் மாலைதீவு, நேபாளம், சிறிலங்கா மற்றும் பங்களாதேஸ் உட்பட்ட சிறிய தென்னாசிய நாடுகளில் தமது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக தொடர்ந்தும் போரிடுகின்றன.

மாலைதீவின் முன்னைய அதிபர் யமீனின் அரசாங்கம் சீனாவிற்கு ஆதரவாகச் செயற்பட்டது. இந்த அரசாங்கம் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, மாலைதீவின் புதிய அரசாங்கம் தனது ஆட்சியை சுமூகமாகக் கொண்டு செல்வதற்கு மாலைதீவின் மீதான தனது அதிகாரத்தை சீனா கைவிட வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ஆசிய யுத்தத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு வழங்கக் கூடாது என சீனா தனது அரச ஊடகத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் சீனாவின் இந்த நிலைப்பாடு தொடர்பாக EurAsian Times ஊடகம் இங்கு இப்பத்தியின் ஊடாக ஆராய்கிறது.

ஏற்கனவே EurAsian Times ஊடகத்தின் அறிக்கையில், மாலைதீவு மீதான இந்தியா மற்றும் சீனாவின் முறுகல் நிலையில் அமெரிக்கா தலையிட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மாலைதீவில் சுமூகமான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் எவருக்கும் எதிராக ‘பொருத்தமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என சீன ஆதரவாளரான மாலைதீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யமீனை நேரடியாகக் குற்றம் சுமத்தும் பாணியில் அமெரிக்காவின் உயர் மட்ட இராஜதந்திர அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

மாலைதீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யமீனை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் இதில் வெற்றி பெற்றுள்ளதுடன் இதில் தோல்வியடைந்த அப்துல்லா யமீன் தனது தேர்தல் தோல்வியை தடுக்கும்  சீன குளோபல் ரைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘மாலைதீவு மக்களின் உறுதியைக் குழிதோண்டிப் புதைக்கப்படுவதற்கான அச்சுறுத்தல்களை விடுவிக்கக் கூடிய மாலைதீவின் முன்னாள் அதிபர் யமீனின் செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் மாலைதீவில் அமைதியை  ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு தடையாக இருப்போருக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுக்கும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் றொபேற் பலடினோ தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்’ என்கின்ற செய்தியானது சீனாவின் குளோபல் ரைம்ஸ் ஊடகத்தில் வெளியிடப்பட்டது.

‘அமெரிக்காவின் இந்த அறிவிப்பானது இந்தியாவின் பலத்தை மேலும் அதிகரிப்பதற்கு துணைபோகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கையானது சீனாவைக் குறிவைத்தே விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் மாலைதீவு தொடர்பான அறிவிப்பானது இந்தியாவிற்கு மேலும் உந்துசக்தியாக அமையும் போல் தென்படுகிறது’ என சீன ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாலைதீவானது இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளாலும் இந்தியாவின் பாரம்பரிய மண்டலமாக நோக்கப்படுகிறது.

தென்கிழக்காசிய நாடுகளில் இடம்பெறும் ஆட்சி மாற்றங்கள் பொதுவானவை. இவ்வாறான அரசியல் மாற்றங்களுக்கேற்றவாறு ஏனைய நாடுகள் தமது உறவுகளை சீராக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் இந்த நாடுகள் ஆட்சி மாற்றங்கள் இடம்பெறும் தென்கிழக்காசிய நாடுகளின் புதிய தலைமைகளுடன் சாதகமான நட்புறவைப் பேணுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

முன்னைய அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டுத் திட்டங்களால் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்கின்ற பட்சத்தில் புதிய அரசாங்கம் இத்திட்டங்களை இரத்துச் செய்யலாம். அத்துடன் ஏனைய நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாதகமான வலுவான நகர்வுகளை புதிய அரசாங்கம் மேற்கொள்ளலாம் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சீனாவானது பிற நாட்டின் அரசியலில் தலையீடு செய்யவில்லை. மாலைதீவு விவகாரத்தில், சீனாவானது தனது ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்தில் மாலைதீவின் பங்களிப்பையும் வரவேற்றிருந்தது. மாலைதீவில் கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் சீனாவின் திட்டங்களை மீளாய்வு செய்வதாக வாக்குறுதி வழங்கிய எதிர்க்கட்சித் தலைவரே வெற்றி பெற்றிருந்தார்.

அத்துடன் மாலைதீவுடன் ஆழமான ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கான மற்றும் தனது ஒத்தாசைகளையும் மேலும் பலப்படுத்துவதற்கான தனது விருப்பத்தை சீனாவும் வெளிப்படுத்தியிருந்தது’ என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா, நேபாளம், பங்களாதேஸ் மற்றும் மாலைதீவு உட்பட்ட தென்னாசிய நாடுகளில் இடம்பெறும் தேர்தல் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் இந்த நாடுகளில் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான ஒரு பனிப்போராகவே அவதானிப்பாளர்களால் நோக்கப்படுகிறது.

தென்னாசியப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை எதிர்க்கும் நோக்குடனேயே இந்தியாவுடன் அமெரிக்கா கூட்டுச் சேர்வதாகவும் இது அமெரிக்காவின் மூலோபாய இலக்குகளாகக் காணப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பிராந்தியத்தில் அமெரிக்கா தனது கையை மேலோங்கச் செய்வதற்காகவே இந்தியாவிற்கு உதவுவதாகவும் இதன் மூலம் அமெரிக்கா தனது நலன்களை நிறைவேற்றுவதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘தென்னாசிய நாடுகளில் இடம்பெறும் தேர்தல்களை இந்தியாவிடம் தோல்வியுறுவதற்கான அல்லது வெற்றி பெறுவதற்கான ஒரு களமாக சீனா நோக்கவில்லை. ஆனால் இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து கொண்டு இப்பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கும் சீன எதிர்ப்பு நகர்வுகளில் ஈடுபடுவதையும் சீனா விரும்பவில்லை.

இவ்விரு நாடுகளின் இந்தச் செயற்பாடுகளானது இப்பிராந்தியத்தில் சீனாவின் எழுச்சியைத் தடுப்பதற்கு இயலாததாக இருக்கலாம். ஆனால் இவ்விரு நாடுகளாலும் தென்னாசியப் பிராந்தியத்தின் அமைதியையும் அபிவிருத்தியையும் ஆபத்திற்குள் தள்ளிவிட முடியும்’ என அந்த அறிக்கையில் இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழிமூலம்       –  EurAsian Times
மொழியாக்கம் – நித்தியபாரதி

ஒரு கருத்து “இந்தியாவும் சீனாவும் மோதும் ஆசியாவுக்கான போர்”

  1. Arinesaratnam Gowrikanthan says:

    மிகப்பலனுள்ள கட்டுரை. நிலமைகளைப் பார்க்கும் கோணமும் சரியானது. ஆசிய நாடுகளின் இராணுவ சமநிலையை எவ்விதம் பாதுகாப்பது என்பது ஆசிய்நாடுகளுக்குத் தெஊரத்திரியும். அமெரிக்க வல்லூறுகளுக்கு இங்கென்னவேலை. வியட்நாமை விட்டு அடித்துத் திரட்டப்பட்டதுபோல் ஆசியா கண்டத்தைவிட்டே அடித்துத் துரத்தப்படும் நிலை வெகுதூரத்தில் இல்லை. அதற்க்குள் அமெரிக்கா தனது ஆசியாவை நோக்கியான கொள்கையை மாற்றிக்கொன்றால் தப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *