மேலும்

இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு – சீனாவும் பங்கு கோருகிறது

இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை எந்தவொரு தனிநாடும் உறுதி செய்ய முடியாது என்றும், அதில் தாமும் பெரிய பங்கை வகிக்க விரும்புவதாகவும், சீனக் கடற்படை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று ஆரம்பமாகிய – சிறிலங்கா கடற்படையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘காலி கலந்துரையாடல்-2018’ இல், உரையாற்றிய சீன கடற்படை கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் தளபதி றியர் அட்மிரல் ஹன் ஷியாவோஹூ இதனைத் தெரிவித்தார்.

”இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலை மிகவும் சிக்கலானதும் கடினமானதும் ஆகும்.

இந்த நிலைமையை எந்தவொரு தனி நாடும் கையாளவோ, நிரந்தரமான பாதுகாப்பை உறுதி செய்யவோ முடியாது.

இதற்கு பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும். கூட்டாகப் பணியாற்ற வேண்டும்.இணைந்து தீர்வு காண வேண்டும்.

இந்திய பெருங்கடல் பிராந்திய நாடுகளின் முக்கிய நலன்களையும், பாரிய கரிசனைகளையும் கருத்தில் கொண்டு, பிராந்திய மற்றும் முன்னாள் பிராந்திய நாடுகளுடன்   கடல்சார் பாதுகாப்பு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாட சீனா விரும்புகிறது.

அத்துடன்,  கடல் பாதுகாப்பு  ஆட்சியில் பங்களிக்கவும், கடற்கொள்ளை எதிர்ப்பு அனுபவங்களை பரிமாறிக் கொள்ளவும், நிலையான கடப்பாட்டைப் பேணுவதற்கு தோள்கொடுக்கவும், பாதுகாப்புக்கான நிதி ஆதரவை வழங்கவும், கடல்சார் பாதுகாப்பு பொறுப்புக்கு கூட்டாக தோள்கொடுக்கவும்,  பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயற்பட சீனா விரும்புகிறது.

இந்திய பெருங்கடலில் அமைதியையும், உறுதித்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்கு ஒரு நியாயமான- அறிவுசார்ந்த கடல்சார் ஒழுங்கு முக்கியமானது.

திறந்த, நேர்மையான, ஆழமான பேச்சுக்களின் மூலம்-  நியாயமான, அறிவுசார்ந்த,  கடல் சட்டம் தொடர்பான ஐ.நா பிரகடனம் மற்றும், சம்பந்தப்பட்ட அனைத்துலக சட்டங்களின் அடிப்படை கொள்கைகளின் அடிப்படையிலான, வெளிப்படையான கடல்சார் விதிமுறைகளின் அடிப்படையில்-  இந்தியப் பெருங்கடலில், சுதந்திரமான, திறந்த, வெளிப்படையான,  ஒத்துழைப்பு சார்ந்த, கடல்சார் ஒழுங்கை கட்டியெழுப்புவதற்கு, அனைத்துலக சமூகத்துடன்  இணைந்து செயற்பட  சீனா விரும்புகிறது.

இந்தியப் பெருங்கடலில்  அமைதி மற்றும் உறுதிநிலையைப் பாதுகாப்பதற்கு, சவால்களைச் சமாளிக்கவும், கடல்பாதுகாப்பு அடித்தளத்தை உறுதிப்படுத்தவும், கடல்சார் திறனை முன்னேற்றுவது அவசியம்.

கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு நாங்கள் ஆதரவு வழங்கத் தயாராக இருக்கிறோம்.

கடல்சார் தகவல் பகிர்வுக்கு முன்னுரிமை அளித்தல்,  கடல்சார் பாதுகாப்பு வசதிகளின் இணைப்பை முன்னேற்றுதல்,  சரியான கடல்சார் ஒருங்கிணைப்பு, அனைத்து கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களைச் சமாளித்தல் உள்ளிட்ட இந்திய பெருங்கடலின் அமைதி மற்றும் உறுதித்தன்மையை  மேம்படுத்துவதற்கான அனைத்துலக சமூகத்தின் முன்முயற்சியை சீனா ஆதரிக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சிறிலங்கா கடற்படை ஆண்டு தோறும் நடத்தும் கடல் பாதுகாப்புக் கருத்தரங்கான, ‘காலி கலந்துரையாடல் -2018’ கொழும்பில் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும் இந்த கடல் பாதுகாப்பு மாநாடு,  இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இதில் 50 நாடுகளின் பிரதிநிதிகள், 17 அமைப்புகள் கலந்து கொள்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *