மேலும்

மைத்திரி கொலைச் சதி – நாமல் குமாரவின் அலைபேசியை சீனாவுக்கு அனுப்ப முடிவு

சிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக தகவல் வெளியிட்ட நாமல் குமாரவின் அலைபேசியை தடயவியல் ஆய்வு செய்வதற்கு, சீன நிபுணர்களிடம் உதவி கோர சிறிலங்கா அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பின்னணியுடன், படுகொலைச் சதித் திட்டம் தீட்டப்பட்டதான குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், நாமல் குமாரவின் அலைபேசியை, சீனாவில் ஆய்வுக்குட்படுத்த எடுக்கப்பட்டுள்ள முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமல் குமாரவின் தொலைபேசியை ஆய்வுக்குட்படுத்திய தடயவியல் விசாரணையாளர்கள், அதில் குற்றத்தைச் சுட்டிக்காட்டும் எந்த உரையாடலையும் கண்டறியத் தவறியுள்ளனர்.

இந்த படுகொலைச் சதி குற்றச்சாட்டை கூறிய நாமல் குமார, பிரதி காவல்துறை மா அதிபருடன் தாம் மேற்கொண்ட அலைபேசி உரையாடல் பதிவுகள் மர்மமான முறையில், அலைபேசிப் பதிவில் இருந்து அழிக்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவுடனான அந்த அலைபேசி உரையாடல் பதிவு தம்மிடம் இருப்பதாக நாமல் குமார கூறியிருந்தார்.

சிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்துடன்  தொடர்புடைய எந்தவொரு பதிவுகளையும், நாமல் குமார வழங்கவில்லை என்று விசாரணைகளுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தனது அலைபேசியில்  உள்ள பதிவுகளை அழிக்க இந்திய புலனாய்வுப் பிரிவினர் சில தவறுகளை விதைத்திருக்கலாம் என்று அவர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

தடயவியல் விசாரணையாளர்களால், நாமல் குமார மற்றும் நாலக சில்வாவின், ஏனைய சில குரல் பதிவுகளை மாத்திரம் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அந்த உரையாடல்களில், சிறிசேனவைக் கொல்லும் சதித்திட்டம் பற்றி எதுவும் இல்லை.

இந்த நிலையில் நாமல் குமாரவின் அலைபேசியை சீன நிபுணர்களிடம் அனுப்பி பகுப்பாய்வு செய்து, அழிக்கப்பட்ட எந்த தரவுகளையும் மீட்கலாம் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *