மேலும்

விக்னேஸ்வரன் – கூட்டமைப்பு இடையே தொடங்கியது மோதல்

வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், வடக்கு மாகாண முதலமைச்சரும் ஏட்டிக்குப் போட்டியான, விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தியடைந்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், தனது எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை வரும் 24ஆம் நாள் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

நல்லூரில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றில் இது தொடர்பாக அவர் அறிவிக்கவுள்ளார்.

எமது பிரதிநிதிகள், தோசையைக் கூட போடத் தெரியாதவர்கள்.

இந்த நிலையில், யாழ். இந்துக் கல்லூரியில் நேற்று மாலை நடந்த நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் அரசியல் பிரதிநிதிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள், மேடைப் பேச்சுக்கே ஏற்றவர்கள் என்றும், வாய் வீரம்காட்டுபவர்கள் என்றும் குறிப்பிட்ட அவர், புகழ்ச்சிக்கு மயங்கி, அரசாங்கத்துக்கு முண்டு கொடுப்பவர்கள் என்றும் விமர்சித்தார்.

அரசியலில் தோசையை எப்போது திருப்ப வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற சௌமியமூர்த்தி தொண்டமானின் மேற்கோளைச் சுட்டிக்காட்டி, எமது தமிழ்ப் பிரதிநிதிகள், தோசையைக் கூட போடத் தெரியாதவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது  நாம் செய்த பாவம் .

அதேவேளை, ஒட்டுசுட்டானில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா, விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது 5 ஆண்டுகளுக்கு முன்னர் தாம் செய்த பாவம் என்று  கூறியுள்ளார்.

அந்தப் பாவத்தின் விளைவை கடந்த 5 ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் மீதும், விக்னேஸ்வரன் மீது கூட்டமைப்பும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *