கடன்பொறியில் இருந்து சிறிலங்கா போன்ற நாடுகளை காப்பாற்ற அமெரிக்கா முன்வைக்கும் திட்டம்
அமெரிக்க அரசாங்கத்தின் பின்புலத்துடனான நிதி முதலீடுகளின் மூலம், சிறிலங்கா போன்ற நாடுகளை கடன் பொறியில் இருந்து காப்பாற்ற முடியும் என்று, அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்காவின் கடல்நடந்த தனியார் முதலீட்டு நிறுவனத்தின் உதவி நி்றைவேற்றுத் தலைவர் டேவிட் பொஹிஜியன், இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த 3ஆம் நாள் கொழும்பு வந்த இவர், நேற்றுவரை சிறிலங்காவில் தங்கியிருந்து, நிதியமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
“நாம் சிறிலங்கா மற்றும் ஏனைய நட்பு நாடுகளுடன் இணைந்து, துறைமுகங்கள், மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு துறைகளில் முதலீட்டு வாடிய்ப்புகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கிறோம்.
அது நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு ஊக்கமளிக்கும். தொழில்வாய்ப்புகளை உருவாக்கும்.
இந்தியப் பெருங்கடல் கடற்சார் செயற்பாடுகளுக்கு சிறிலங்கா ஒரு கேந்திரமாக இருக்கிறது. பூகோள பொருளாதாரத்தில் முக்கி்ய பங்காற்றுகிறது.” என்றும் டேவிட் பொஹிஜியன்,தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் கடல்நடந்த தனியார் முதலீட்டு நிறுவனத்தினால், சிறிலங்காவில் 118 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது 20 மில்லியன் டொலர் பெறுமதியான நான்கு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அரசாங்க கேள்விப் பத்திரங்களைக் கோரும் போது, அமெரிக்க நிறுவனங்களையும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதையும், நியாயமான, ஊழலற்ற வகையில் கேள்விப் பத்திரங்கள் ஆராயப்படுவதையும் உறுதிப்படுத்துவது பற்றி சிறிலங்கா அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம் என பதில் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கான மிகப் பெயரி தனி ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது. நாங்கள் சிறிலங்காவுக்கு, விவசாயப் பொருட்கள் தொடக்கம், மென்பொருள் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்கள் வரை அமெரிக்க ஏற்றுமதிகளை அதிகரிக்க விரும்புகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.