மேலும்

கடன் பொறி என்பது மேற்குலக ஊடகங்களின் பொய்க் குற்றச்சாட்டு – சீனா கூறுகிறது

கடன் பொறி என்பது, மேற்குலக ஊடகங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்யான பரப்புரை என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரக, பேச்சாளர்  லூ சோங் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் நேற்று குறிப்பிட்ட சில செய்தியாளர்களுடன் நடத்திய சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சீனாவினதும், சிறிலங்கா உள்ளிட்ட ஏனைய அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளினதும், கூட்டு அபிவிருத்திக்கு நேரடியாகத் தடைபோடும் நோக்கிலேயே, மேற்குலக ஊடகங்கள், கடன் பொறி என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றன.

அனைத்துலக மற்றும் பிராந்திய அரசியலிலும், பொருளாதாரத்திலும், மேற்குலகத்தின் மரபுசார் மேலாதிக்க நிலையை நிலைநாட்டுவதே, இத்தகைய குற்றச்சாட்டுக்கான அடிப்படையான காரணமாகும்.

சிறிலங்காவின் அபிவிருத்திக்கு தேவையான நிதியை சீனா தொடர்ந்து வழங்கும்.

இரண்டு நாடுகள மற்றும், இரண்டு நாடுகளினது மக்களுக்கும், நன்மையளிக்கும் வகையில், தலையீடுகளை அகற்றுதல், நம்பிக்கையை வலுப்படுத்தல், மற்றும் கூட்டு ஒத்துழைப்பை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுக்காக, சிறிலங்கா அரசாங்கம், வணிக சமூகம், ஊடகங்கள்,மற்றும் பொதுமக்களுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது.

சிறிலங்காவின் வெளிநாட்டுக் கடன்களில், சீனாவின் கடன்கள் பிரதான பகுதி அல்ல. 2017ஆம் ஆண்டின் சிறிலங்கா மத்திய வங்கி அறிக்கையில், சிறிலங்காவின் மொத்த வெளிநாட்டுக் கடன், 51.824 பில்லியன் டொலர் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் சீனாவின் கடன்கள், 10.6 வீதம் அல்லது, 5.5 பில்லியன் டொலர்கள் மாத்திரமே.

அதைவிட, 61.5 வீதமான சீனக் கடன்கள், ( 3.38 பில்லியன் டொலர்) அனைத்துலகச் சந்தை நிலவரங்களை விட குறைந்த வட்டியிலான இலகு கடன்கள் தான்.

சீனாவிடம் பெறப்பட்ட வணிகக் கடன்களும் கூட, அப்போதைய அனைத்துலக சந்தை நிலவரங்களின் அடிப்படையில் இரண்டு தரப்புகளும் பேசி இணக்கம் காணப்பட்டிருந்தன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *