மேலும்

உச்சநீதிமன்றத்தின் விளக்கம் கிடைக்கும் வரை கூட்டு அரசு தொடரும் – திலங்க சுமதிபால

unp-slfp19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கு தனக்குள்ள அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் இந்த வியாக்கியானம் கிடைக்கும் வரை, பொறுத்திருக்கும்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் அவர் நேற்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய போது குறிப்பிட்டார்.

“2005 செப்ரெம்பர் 03ஆம் நாள் உருவாக்கப்பட்ட கூட்டு அரசாங்கத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபரைக் கோரினோம்.

கூட்டு அரசில் ஏற்படுத்தக் கூடிய திடீர் மாற்றம் நாட்டை உறுதியற்ற நிலைக்குக் கொண்டு செல்லும் என்றும், எனவே சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றெ எதையும் முடிவு செய்ய வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் கூறினார்.

அதேவேளை, சட்டமா அதிபர் தாம் தனித்து இந்த விடயத்தில் ஆலோசனை கூற முடியாது என்றும், 19 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான வியாக்கியானத்துக்காக உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையையும் கோர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கு மட்டுமே, அரசியலமைப்பு விதிகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சட்டவிளக்கங்களைக் கோருவதற்கு அதிகாரம் உள்ளது. அவர் அதனைச் செய்வார்.

உச்சநீதிமன்றத்தின்  முடிவு சிறிலங்கா அதிபருக்கு அறிவிக்கப்படும் வரை, கூட்டு அரசாங்கம் தொடரும்.

உச்சநீதிமன்றத்தின் விளக்கம் தமக்குக் கிடைக்கும் வரை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்தில் தொடர வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

அவர்களை நாடாளுமன்றத்தில் ஒரு குழுவாக செயற்பட சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். அதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் விவாதங்களில் பேசமாட்டார்கள்.” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *