மேலும்

சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க வேண்டும் – சிவில் சமூகம் கோரிக்கை

sarath-fonsekaபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமித்து, நீண்டகாலமாக இழுபடும் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சிவில் சமூக அமைப்பான புரவெசி பலய கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய புரவெசி பலய அமைப்பு, தற்போதைய அரசியல் குழப்பங்களைத் தீர்த்து,  மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, புரவெசி பலயவைச் சேர்ந்த தம்பர அமில தேரர் நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது,

“அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க வேண்டும்.

முன்னைய ஆட்சிக்கால குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சரத் பொன்சேகாவை விட பொருத்தமானவர் வேறு யாருமல்ல.

சிறிலங்கா இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ராஜபக்சக்களுக்கு எதிரான நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிசேன- ரணில் அரசாங்கம் தவறியுள்ளது. அதன் விளைவு தான், பெப்ரவரி 10 தேர்தல் முடிவுகள்.

இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு சரத் பொன்சேகாவுக்கு 6 மாத கால அவகாசத்தை அரசாங்கம் அளிக்க வேண்டும்.

ராஜபக்சக்களின் வழிகாட்டலின் கீழ், இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்ட, ஆயுதப்படை அதிகாரிகளுக்கும் படையினருக்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சீருடையில் தவறுகளைச் செய்த கொலைகாரர்களும், வல்லுறவாளர்களும், சீருடைக்குப் பின்னால் மறைந்து தப்பிக் கொள்ள அனுமதிக்கப்படக் கூடாது.

இரசானப் பசளைகளை உரிய நேரத்தில் விநியோகிக்கத் தவறிய விவசாயக அமைச்சர் துமிந்த திசநாயக்கவை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் சிவில் சமூகத்தைச் சேர்ந்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, நிமால்கா பெர்னான்டோ, சமீர பெரேரா, சமன் ரத்னபிரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *