மேலும்

யாழ். மாநகரசபையில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஈபிடிபி, ஐதேக நிபந்தனையற்ற ஆதரவு

jaffnaயாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு, ஈபிடிபியும், ஐதேகவும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.

வடக்கு கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெறவில்லை. இதனால் தொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் பிறகட்சிகளின் ஆதரவுடனேயே நிர்வாகத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து, உள்ளூராட்சி நிர்வாகத்தை பலப்படுத்த வேண்டும் என்ற கருத்து, சிவில் சமூகத்தினால் வலியுறுத்தப்பட்டது.

இந்தச் சூழலில், 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாநகர சபையில், அதிகபட்சமாக 16 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, வெளியில் இருந்து- நிபந்தனையற்ற ஆதரவை வழங்க 10 ஆசனங்களைக் கொண்ட ஈபிடிபியும், 3 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியும் முன்வந்துள்ளன.

பெரும்பான்மை பலம் இல்லாத உள்ளூராட்சி சபைகளில், அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சி, ஆட்சியமைப்பதற்கு ஈபிடிபி ஆதரவு அளிக்கும் என்றும், மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஆறு மாதங்களுக்கு அளிக்கப்படும் இந்த நிபந்தனையற்ற ஆதரவு, நிர்வாகத்திறனைப் பொறுத்து நீடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அதேவேளை, மத்தியில் கூட்டு அரசாங்கத்துக்கு ஐதேக ஆதரவு அளிப்பதால், யாழ். மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஐதேக ஆதரவு அளிக்கும் என்று அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *