மேலும்

பிரச்சினையை தீர்க்காவிடின் அனைத்துலக அழுத்தம் தீவிரமடையும் – சம்பந்தன் எச்சரிக்கை

R.sampanthanபிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு காணப்படாவிடின், சிறிலங்கா மீதான அனைத்துலக அழுத்தம் மேலும் மோசமடையும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான, வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக, அரசியலமைப்பு பேரவையில் நேற்று நடந்த மூன்றாவது நாள் விவாதத்தை ஆரம்பித்து வைத்து  உரையாற்றிய போதே இரா.சம்பந்தன் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

“ஜனநாயகம் என்பது நாட்டில் உயர்வானதாக இருக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிர்வாக கட்டமைப்புக்கள் அமைக்கப்பட வேண்டும்.

நாட்டிலுள்ள அனைவரினது  ஜனநாயகமும் மேம்படுத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையிலேயே இந்த அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம்.

எமது நாட்டின் மீதான அனைத்துலக  அழுத்தம் விலக வேண்டும் என்றும், பிரச்சினைகள் உள்நாட்டில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் விரும்புகின்றோம்.

பிரச்சினையை உள்நாட்டில் தீர்க்காவிட்டால் அனைத்துலக அழுத்தம் மோசமடையும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாயின் பொதுவான விடயங்களில் தேசிய இணக்கப்பாடு அவசியமானது. அதிகபட்ச சாத்தியமான ஒருமித்த கருத்துக்களுடன் புதிய அரசியலமைப்பை தயாரிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

பொது மக்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இது இருக்க வேண்டும்.

போர் முடிவடைந்த பின்னர் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கமே அனைத்துலகத்துக்கு எடுத்துக் கூறியிருந்தது.

எனவே அவ்வாறான தீர்வொன்றை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது கட்டாயமாகும்.  உலகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

அனைத்துலக மட்டத்தில் சிறிலங்கா எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த நிலைமை மோசமடையக் கூடாது.

எனவே, தேசிய பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு, மக்களின் அங்கீகாரத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

அதியுச்ச அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கூறியிருந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச,  தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றியுள்ளமை துரதிஷ்டவசமானதாகும்.

2006ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌ச  அனைத்துக் கட்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது, “ஒருமை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறைமை என்பன பாதுகாக்கப்பட வேண்டும். இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு களம் திறந்து விடப்பட்டுள்ளது.

இதற்கான எமது அர்ப்பணிப்பானது அனைத்துலக சமூகத்தை உள்ளடக்கியதாகவும் குறிப்பாக இந்தியா மற்றும் இணைத் தலைமை நாடுகளின் பங்களிப்புடனானதாக இருக்கும். எந்தவொரு பிளவும் ஏற்படாது. பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வொன்றுக்குச் செயல்வதே எமது நோக்கமாகும் எனக் கூறியிருந்தார்.

அவ்வாறு கூறியவர் தற்பொழுது தலைகீழாக மாறியிருப்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *