மேலும்

ஜனவரி கடைசி வாரத்தில் உள்ளூராட்சித் தேர்தல்

Srilanka-Electionசிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 25ஆம் நாளுக்கும், 31ஆம் நாளுக்கும் இடையில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி சபைகளினதும், அவற்றுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களினதும் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டதை அடுத்தே,  தேர்தல் திணைக்களம் இந்த முடிவை எடுத்துள்ளது.

புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையில், வர்த்தமானி அறிவிப்பில் நேற்றுக்காலை உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா கையெழுத்திட்டிருந்தார்.

இதையடுத்து, உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட்டன.

நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய, 341 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படும். இவற்றுக்கு 8,356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அத்துடன், நுவரெலிய மாவட்டத்தில் புதிதாக நான்கு பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அம்பகமுவ பிரதேசசபை, மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலிய என மூன்று பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நுவரெலிய பிரதேசசபையும், மூன்றாக பிரிக்கப்பட்டு, நுவரெலிய, அகரபத்தன, கொட்டகல பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து, உள்ளூராட்சித் தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் திணைக்களம் வெளியிடவுள்ளது.

நொவம்பர் 27ஆம் நாளுக்கும் 30ஆம் நாளுக்கும் இடையில் வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி டிசெம்பர் 11ஆம் நாளுக்கும், டிசம்பர் 17ஆம் நாள் நண்பகல் 12 மணிக்கும் இடையில்,  வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் காலமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 25ஆம் நாளுக்கும், 31ஆம் நாளுக்கும் இடைப்பட்ட- ஞாயிறு அல்லது அரச விடுமுறை நாள் அல்லாத ஒரு நாளில், தேர்தலை நடத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.

இதுதொடர்பான இறுதியான முடிவுகளை தேர்தல் ஆணையமே அறிவிக்கும்.

நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய, உள்ளூராட்சித் தேர்தல்- வட்டார வாரி மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை ஆகியன இணைந்த கலப்பு தேர்தல் முறையாக இடம்பெறும்.

60 வீதமான உறுப்பினர்கள் வட்டார வாரியாகவும், 40 வீதமான உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழும் தெரிவு செய்யப்படுவர்.

புதிய சட்டத்தின்படி, பெண்களுக்கு வேட்புமனுக்களில் 25 வீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். எனினும், முன்னர், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் 25 வீத வேட்பாளர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் சமுர்த்தி அதிகாரிகள் உள்ளிட்ட களநிலை அதிகாரிகள், போட்டியிட முடியாது. வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு முன்னர், களநிலைப் பணிகளில் இருந்து விலகிய, அல்லது ஓய்வுபெற்ற அதிகாரிகளால் மாத்திரம் இந்த தேர்தலில் போட்டியிட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *