மேலும்

ஒரே நாளில் 1.5 மில்லியன் ரூபா – லலித்தை மீட்க பிக்குகள் வீதி வீதியாக நிதி சேகரிப்பு

Pindapatha- Buddhist monksகொழும்பு நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்காக பௌத்த பிக்குகளின் மூலம், கூட்டு எதிரணி நிதி சேகரித்து வருகிறது.

அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய இவர்கள் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்த கொழும்பு மேல் நீதிமன்றம், இரண்டு பேரும் தலா 50 இலட்சம் ரூபாவை இழப்பீடாகவும், 20 இலட்சம் ரூபாவை தண்டமாகவும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இழப்பீடு மற்றும் தண்டப்பணத்தை செலுத்தாவிடின், மேலும் 3 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

Pindapatha- Buddhist monks

இந்த நிலையில், லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள இழப்பீடு, மற்றும் தண்டப்பணத்தை செலுத்துவதற்கான நிதியை, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி, பௌத்த பிக்குகள் மூலம் திரட்டி வருகிறது.

பிண்டபாத என்ற பாதயாத்திரை மூலம் கொழும்பில் பௌத்த பிக்குகள் நேற்று நிதி திரட்டினர். நேற்று மாத்திரம், 1.5 மில்லியன் ரூபா திரட்டப்பட்டதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

நேற்றைய நிதி திரட்டும் நடவடிக்கையில்  350 பிக்குகள் ஈடுபட்டதாகவும், அடுத்த கட்டமாக நாளை கிரிபத்கொடவில் இந்த நிதி திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *