மேலும்

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு அடுத்த மாதம் கைச்சாத்து

Srilanka-chinaஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் அடுத்தமாதம் கையெழுத்திடவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இது தொடர்பான உடன்பாட்டை விரைவில் செய்து கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

துறைமுகத்தின் நிர்வாக மற்றும் வர்த்தக செயற்பாடுகளை கையாளுவதற்காக இரண்டு தனித்தனியான நிறுவனங்களும் உருவாக்கப்படவுள்ளன.

நிர்வாக செயற்பாடுகளுக்காக உருவாக்கப்படும் நிறுவனத்தின் பெரும்பகுதி உரிமையை சிறிலங்கா தரப்பு கொண்டிருக்கும். எனவே, இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா துறைமுகங்கள் அதிகாரசபை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டியதில்லை.

எனினும், துறைமுக நடவடிக்கைகளைக் கையாளும் நிறுவனத்தில், சீன நிறுவனமே கூடுதல் பங்கு உரிமையைக் கொண்டிருக்கும். இதில், 80 வீத உரிமை சீனாவுக்கு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாடு கடந்த ஜனவரி மாதம் கையெழுத்திடத் தீர்மானிக்கப்பட்டது.

எனினும், இதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள், அரசாங்கத்துக்குள் காணப்பட்ட முரண்பாடுகள் மற்றும் துறைமுக அதிகாரசபை சட்டத்தினால் காணப்பட்ட தடைகளால் இழுபறிப்பட்டு வந்தது.

தற்போது இந்த தடைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், உடன்பாடு அடுத்தமாதம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கருத்து “அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு அடுத்த மாதம் கைச்சாத்து”

  1. Arinesaratnam Gowrikanthan says:

    மூத்தண்ணனுக்கு இரத்தக் கொதிப்பு ஏறியிருக்குமே? தமது சொந்தப்பிரஜைகளான தமிழர்களுக்கே துரோகம் செய்துவரும் ஸ்ரீ லங்கா அரசிடம் நட்பை எதிர்பார்த்த இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை என்னவென்பது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *