மேலும்

வீழ்ந்து நொருங்கிய உலங்குவானூர்தியை மீட்க முடியாத நிலை

crashed-heliவெள்ள மீட்பு நடவடிக்கையின் போது, காலி- பத்தேகம பகுதியில் விபத்துக்குள்ளாகிய எம்.ஐ.17 உலங்குவானூர்தியை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

“நேற்றுக்காலை பத்தேகம- இனிமங்கட பகுதியில் உதவிப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தியை அவசரமாகத் தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

எனினும், உலங்குவானூர்தியைத் தரையிறக்குவதற்கு அங்கு பொருத்தமான இடம் இருக்கவில்லை.  விமானி அனுபவம் மிக்கவராக இருந்ததால், மரங்கள், வீடு என்பனவற்றுக்கு மத்தியில் அதனைத் தரையிறக்கினார்.

இதன்போது உலங்குவானூர்தியின் வால் பகுதி வீட்டின் மீது மோதி உடைந்து போனது. மரங்களுக்கிடையில் தரையிறக்கப்பட்டதால், அதன் காற்றாடிகளும் உடைந்து நொருங்கின.

உலங்குவானூர்தியின் முன்பகுதி, வெள்ள நீரிலும், பின்பகுதி மேட்டுப் பாங்கான பகுதியிலும் சிக்கிக்கொண்டன.

crashed-heli

படம் – டெய்லி மிரர்

தரையிறக்கப்படும் போது உலங்குவானூர்தி பலத்த சேதமடைந்த போதிலும், அதில் பயணம் செய்த விமானிகள் உள்ளிட்ட 5 விமானப்படையினர் மற்றும் ஐந்து உதவிப் பணியாளர்கள் பாதுகாப்பாக அதிலிருந்து வெளியேறினர்.

சேதமடைந்த நிலையில் தரையிறக்கப்பட்ட உலங்குவானூர்தியை மீட்க முடியவில்லை. சுற்றிவர வெள்ளம் சூழ்ந்திருப்பதால், அதனை மீட்க முடியாதுள்ளது.

வெள்ளம் வடிந்த பின்னரே அதனை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் பின்னரே உலங்குவானூர்திக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய முடியும்” என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் கிகான் செனிவிரத்ன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *