இயற்கைச் சீற்றத்துக்குப் பலியானோர் தொகை 180 ஆக அதிகரிப்பு
சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 180 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 110 பேர் காணாமல் போயிருப்பதாகவும், 109 பேர் காயமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் கடந்த 14 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மோசமான இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால், ஐந்து இலட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். சுமார் 2000 வீடுகள் முற்றாக அழிந்துள்ளன.
நிலச்சரிவில் சிக்கிய இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கிரிபத்கல மலைப்பகுதிக் கிராமம் ஒன்றில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று 12 சடலங்களை மீட்டுள்ளனர். இங்கிருந்த 15 வீடுகள் முற்றாக அழிந்து போயுள்ளன. இங்கிருந்த ஏனையவர்களின் நிலையை அறிந்து கொள்ளமுடியாதுள்ளது.
இதனிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் பணிகளில் சிறிலங்கா இராணுவம் 1800 படையினரையும், கடற்படை 1100 படையினரையும் ஈடுபடுத்தியுள்ளது. 2000 சிவசில் பாதுகாப்புப்படையினரும் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே பல ஆறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ள போதிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நகரங்கள், கிராமங்களில் வெள்ளநீரின் அளவு எதிர்பார்க்கப்பட்டளவுக்கு குறையவில்லை.
அதேவேளை, வெள்ள ஆபத்து உள்ள பகுதிகளிலும், பலமிழந்து போயுள்ள அணைக்கட்டுகளை மண்மூடைகளைக் கொண்டு பலப்படுத்துவதிலும் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வேடிக்கை பார்க்கச் சென்ற 18 பேர் மரணமாகியிருப்பதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.