பெலாரஸ் நாட்டில் இருந்து போர்த்தளபாடங்களை வாங்குவதில் சிறிலங்கா ஆர்வம்
பெலாரஸ் நாட்டில் இருந்து போர்த்தளபாடங்களைக் கொள்வனவு செய்வதில் சிறிலங்கா இராணுவம் ஆர்வம் கொண்டுள்ளதாக, பெல்டா என்ற பெலாரஸ் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
MILEX 2017 என்ற அனைத்துலக இராணுவ தளபாட கண்காட்சி பெலாரசில் கடந்த மே 20ஆம் நாள் தொடக்கம் 22ஆம் நாள் வரை இடம்பெற்றது.
இந்தக் கண்காட்சியில் சிறிலங்கா இராணுவத்தின் சார்பில் மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தலைமையிலான இராணுவ அதிகாரிகள் குழு பங்கேற்றுள்ளது.
இந்த கண்காட்சியில் பங்கேற்க சிறிலங்கா இராணுவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்த மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க, இந்தக் கண்காட்சியில் ஆயுதம் தாங்கிய கவசவாகனங்கள் கவனத்தை ஈர்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் பிரதானமாக, எமது கவசவாகனங்களை திருத்தியமைத்து, ஆயுததளபாடங்களை நவீனமயப்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளோம்.
அத்துடன் புதிய வகையான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களையும் வாங்குவது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரலாரஸ் நாட்டில் வாங்கப்பட்ட இராணுவ தளபாடங்களை சிறிலங்கா இராணுவம் ஏற்கனவே பயன்படுத்தி வருவதாகவும் மேஜர் ஜெனரல் குலதுங்க தெரிவித்துள்ளார்.