மேலும்

தடையை மீறி தலதா மாளிகைக்கு மேலாக பறந்ததா மோடியின் உலங்குவானூர்தி?

IAF MI-17கண்டியில் தலதா மாளிகைக்கு மேலாக- விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதிக்கு மேலாகப் பறந்ததால் தான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்காக கொண்டு வரப்பட்ட உலங்குவானூர்திகளில் ஒன்று பழுதடைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்காக கொண்டு வரப்பட்ட உலங்குவானூர்தி ஒன்று கண்டி அஸ்கிரிய மைதானத்தில் பழுதடைந்தது. நேற்றுக்காலை அது திருத்தப்பட்ட பின்னர் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

கண்டி தலதா மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு இந்திய குழுவினர் வழிபாடு நடத்தியதையடுத்தே, உலங்குவானூர்தி பறக்கும் நிலையை அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவில் இருந்து வந்த தொழில்நுட்பக் குழுவினர் உலங்குவானூர்தியின் இயந்திரத்தில் புதிய உதிரிப்பாகங்களைப் பொருத்தி திருத்தியமைத்த போதும், அது பறக்க மறுத்து விட்டது. இதையடுத்து தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடு செய்து ஆசி பெறுமாறு இந்திய அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிகாரிகள் ஆலோசனை கூறினர்.

இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு இந்திய உலங்குவானூர்தியின் விமானிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தலதா மாளிகைக்கு சென்று வழிபாடு நடத்தி ஆசி பெற்றனர். இதையடுத்தே உலங்குவானூர்தி பறக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

அதேவேளை, விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்ட தலதா மாளிகைக்கு மேலாக இந்த உலங்குவானூர்தி, மோடியின் வருகைக்கு முந்திய ஒத்திகையின் போது பறந்ததால் தான் பழுதடைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, விமானங்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்ட பகுதிக்கு மேலாக இந்திய விமானங்கள் பறந்த தடையை மீறியதாக எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

கண்டி வான்பரப்புக்கு மேலாக இந்திய உலங்குவானூர்திகள் பறந்ததை மக்கள் கண்டுள்ளனர். ஆனால் அவர்கள் தடையை மீறியிருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *