மேலும்

வடமத்திய மாகாண அதிகாரத்தைக் கைப்பற்ற மைத்திரியுடன் மகிந்த அணி பலப்பரீட்சை

mahinda-maithriவடமத்திய மாகாணசபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மைத்திரி- மகிந்த அணிகளுக்கிடையில் கடும் போட்டி எழுந்துள்ளது. மைத்திரி அணியின் வசமுள்ள வட மத்திய மாகாணசபையின் அதிகாரத்தை கைப்பற்றப் போவதாக மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணியின் மே நாள் பேரணியில் பங்கேற்ற வடமத்திய மாகாண சுகாதார அமைச்சர் நந்தசேனவை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக, சிறிலங்கா அதிபரின் பரிந்துரையின் பேரில் ஹேரத் பண்டா என்ற உறுப்பினரை அமைச்சராக நியமித்திருந்தார்  மாகாண ஆளுனர்ப.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மகிந்த அணியைச் சேர்ந்த வடமத்திய மாகாண போக்குவரத்து அமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் பதவி விலகினார்.

இதைத் தொடர்ந்து வட மத்திய மாகாணசபையில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.

வட மத்திய மாகாணசபையில் உள்ள  22 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களில், அமைச்சர்கள் உள்ளிட்ட 18 பேர் தனியான குழுவாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளனர். இவர்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கின்றனர்.

முதலமைச்சர் பேசல ஜெயரத்ன உள்ளிட்ட நான்கு பேரே மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கின்றனர்.

இந்த நிலையில், வடமத்திய மாகாணசபையில் அதிகாரத்தைக் கைப்பற்றவுள்ளதாக முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்எம்.சந்திரசென தெரிவித்துள்ளார்.

மகிந்த ஆதரவு உறுப்பினர்கள் இன்று மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து இதுதொடர்பாக பேச்சு நடத்தவுள்ளனர். மீண்டும் எஸ்.எம்.ரஞ்சித்தை முதலமைச்சராக நியமிப்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

வரும் செப்ரெம்பர் மாதம் வடமத்திய மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ள நிலையிலேயே, அங்கு ஆளும்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் சொந்த மாவட்டமான பொலன்னறுவ,மற்றும் அனுராதபுர மாவட்டங்களை உள்ளடக்கிய வட மத்திய மாகாணசபையில் மகிந்த ராஜபக்சவின் கை ஓங்கத் தொடங்கியுள்ளமை அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *