24 மணிநேரம் வரையே சிறிலங்காவில் தங்கியிருப்பார் இந்தியப் பிரதமர்
எதிர்வரும் வியாழக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 24 மணி நேரம் வரையே அங்கு தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 11ஆம் திகதி மாலை கொழும்பு வரவுள்ளார்.
அவர் வரும் 12ஆம் நாள் நடைபெறும் ஐ.நா வெசாக் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.
அதன் பின்னர் கண்டிக்குச் சென்று தலதா மாளிகையில் வழிபாடு நடத்தும் இந்தியப்பிரதமர், டிக்கோயாவில் இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட மருத்துவமனையை திறந்து வைப்பார்.
இந்தியப் பிரதமருக்கு வரும் வெள்ளிக்கிழமை கண்டியில் உள்ள அதிபர் மாளிகையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மதியபோசன விருந்து அளிப்பார்.
அன்று மாலையில் கொழும்பு திரும்பும் இந்தியப் பிரதமர் உடனடியாகவே புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.