மேலும்

சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரமும் வர்த்தக தொடர்பும்

மே 2009ல் முடிவிற்கு வந்த,   சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் வடுக்கள் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நகரம் மற்றும் அதன் புறநகர்க் கிராமங்களிலும் இன்னமும் தொடர்கின்றன.

2009 மே 23ல், அதாவது உள்நாட்டு போர் நிறைவுற்று நான்கு நாட்களின் பின்னர் , வீட்டை விட்டுப் புறப்பட்ட பின்னர், இன்னமும் வீடு திரும்பாத தனது கணவரான பத்மசிறியை, 32 வயதான சமூகப் பணியாளரான புண்ணியமூர்த்தி ஜெயதீபா  இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார்.  மட்டக்களப்பு நகருக்கு வடக்கேயுள்ள கிராமத்தில் இராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது இவர் காணாமல் போனார்.

தனது கணவர் வீட்டை விட்டுப் புறப்படும் போது சிவப்பு நிற ரீசேட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் போன்றவற்றை அணிந்திருந்ததாக ஜெயதீபா தெரிவித்தார். தனது கணவரின் இரண்டாவது கால் விரல்களில் மெட்டி காணப்பட்டதாகவும் இராணுவ நடவடிக்கை ஒன்றின் போது இவர் காயமடைந்ததால் இவரது இடுப்பிற்கு அருகில் வடு ஒன்று இருந்ததாகவும் ஜெயதீபா தெரிவித்தார்.

அத்துடன் தனது கணவரின் வலது கையில் தனது பெயர் மற்றும் இரண்டு சிவப்பு நிற இதயங்களின் படங்கள் பச்சை குத்தப்பட்டிருந்ததாகவும் இவர் நினைவுபடுத்தினார். தனது கணவர் தொடர்பான விபரங்களைக் கூறும் போது ஜெயதீபாவின் முகம் கவலையால் வாடியதுடன் அமைதியாக அழுதார்.

சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற 26 ஆண்டுகால போரின் போது காணாமற் போனவர்களின் குடும்பத்தினர் துன்பத்துடனேயே வாழ்கின்றனர்.  போரின் போது இறந்தவர்களை அடையாளம் காண்பதற்கு இவ்வாறான மெட்டி மற்றும் பச்சை குத்தியமை போன்றன அடையாளமாக இருந்திருக்க முடியும்.

Sri Lanka Prisoners

    ஆவணப்படம்

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் இறுதியில் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போரின் போது 100,000 வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.

கடந்த ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தின் காணாமற் போனோர் ஆணைக்குழுவானது போரின் போதும், 1980களின் இறுதியில் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இடம்பெற்ற ஜேவிபி கலவரத்தின் போதும் காணாமற் போனவர்கள் தொடர்பாக 65,000 முறைப்பாடுகளைப் பெற்றுக் கொண்டதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

காணாமற் போனவர்கள் தொடர்பாகப் பணியாற்றுவதற்காக நேர்மையாகப் பணியாற்றுவதற்காகவும் காணாமற் போனோர் தொடர்பான நிரந்தரமான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு நாடாளுமன்றின் அனுமதியை வெற்றிகரமாகப் பெற்றுக் கொண்டமைக்காகவும் சிறிசேன அரசாங்கம், அனைத்துலக சமூகத்தால் பாராட்டப்பட்டது. அதிகாரத்துவ ஆட்சியை நடத்திய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த சிறிசேன அரசாங்கத்தால் போருக்குப் பின்னான நீதியை எட்டுவதற்கான ‘போர்க் குற்றங்களுக்கான விசேட ஆணைக்குழு, உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு’ போன்றவற்றை அமைப்பது தொடர்பில் சாதகமான நிலைப்பாடு காண்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிறிசேன அரசாங்கமானது தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காலத்தை இழுத்தடிக்கின்றது. இதனால் சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான அனைத்துலக சமூகத்தின் பொறுமை குறைந்து செல்கிறது. சிறிலங்காவின் மனித உரிமை நிலைப்பாடானது முன்னேற்றமடைந்து வருவதால் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஜி.எஸ்.பி வரிச்சலுகையின் கீழ் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்ட ஏற்றுமதிக்கான அனுமதி மீளவும் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது எவ்வித வரி அறவீடுகளுமின்றி மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குகிறது.

மகிந்த ராஜபக்சவின் நிர்வாகமானது மனித உரிமையை நிலைநாட்டுவதில் தவறிழைத்ததன் காரணமாக ஆகஸ்ட் 2010ல் ஐரோப்பிய ஒன்றியத்தால் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டிருந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகை இடைநிறுத்தப்பட்டது.

இந்த வரிச்சலுகையின் மூலம் சிறிலங்காவானது தனது ஏற்றுமதியின் மூலம் வருடாந்தம் மேலதிகமாக 1.9 பில்லியன் டொலரை வருமானமாகப் பெறமுடியும். குறிப்பாக இதனுடைய ஆடைத் துறையின் ஊடாக பெருமளவான வருவாயை ஈட்ட முடிவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஆனால் ஏப்ரல் மாதத்தின் மத்தியில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை மே மாதம் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் மீண்டும் இடைநிறுத்தவுள்ளதாக சிறிலங்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு சிறிலங்கா அரசாங்கத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.பி வரிச்சலுகையின்றி சிறிலங்காவானது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஆசிய ஆடை உற்பத்தி நாடுகளுடன் போட்டிபோடுவதில் சவால்களைச் சந்தித்துள்ளது. வியட்னாம், பாகிஸ்தான் மற்றும் கம்போடியா போன்ற நாடுகள் 2009ல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதியில் சிறிலங்காவுடன் போட்டி போட்டன.

அதாவது 2009ல் இந்த ஏற்றுமதி மூலம் சிறிலங்காவானது 2.3 பில்லியன் டொலரை வருமானமாகப் பெற்றுக் கொண்ட அதேவேளையில், வியட்னாம் 2.1 பில்லியன் டொலரும், பாகிஸ்தான் 1.5 பில்லியன் டொலரும் கம்போடியா 1.09 டொலரும் வருமானமாகப் பெற்றுக் கொண்டதாக உலக வர்த்தக நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் இணைந்து செயற்படும் நிறுவனமான அனைத்துலக வர்த்தக மையத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 2015ல், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வியட்னாமின் வருவாயானது 3.9 பில்லியன் டொலராகவும் பாகிஸ்தானின் வருவாய் 2.9 பில்லியன் டொலராகவும் கம்போடியாவின் வருமானம் 3.7 பில்லியன் டொலராகவும் அதிகரித்த இதே வேளையில் சிறிலங்காவின் வருமானமானது 2.4 பில்லியன் டொலராகக் காணப்பட்டது.

சிறிசேன அரசாங்கமானது ஐரோப்பிய வர்த்தக வாய்ப்பிற்கான வழியை மட்டுப்படுத்தியுள்ளதாக கன்பராவிலுள்ள அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியரான பிறேமச்சந்திர அத்துக்கொரள தெரிவித்துள்ளார். ‘சிறிலங்கா அரசாங்கமானது தற்போது எந்தவொரு தெரிவையும் கொண்டிருக்கவில்லை. ஜி.எஸ்.பி வரிச்சலுகை விவகாரம் தொடர்பில் சிறிலங்கா முன்னைய அரசாங்கம் விட்டுக்கொடுக்காத அணுகுமுறையைக் கைக்கொண்டமையானது ஐரோப்பிய சமரசவாளர்களின் கைகளைப் பலப்படுத்திக் கொள்ள வழிவகுத்தது என பேராசிரியர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டமை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட கலப்பு நீதிமன்றப் பொறிமுறை அடங்கிய தீர்மானத்திற்கு சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் செவிசாய்த்தமை போன்றன ராஜபக்ச தலைமையிலான தரப்பினருக்கு அரசியல் ரீதியாக கோபத்தை உண்டுபண்ணியுள்ளது.

சிறிசேன அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னர் அதாவது மார்ச் 2015ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவிற்கு இரண்டு ஆண்டு கால கால அவகாசம் வழங்கப்பட்டதுடன் போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையை ஆரம்பிப்பதற்கு சிறிசேன அங்கீகாரம் வழங்கிய போது அதற்கு ராஜபக்ச கூட்டணியினர் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். ஜெனீவாத் தீர்மானம் தொடர்பாக நாடாளுமன்றில் விவாதத்தை நடத்துமாறு எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுத்தனர்.

நாட்டின் மிகப்  பெரிய சிறுபான்மையினரான தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளும் தமது மக்கள் சார்பாக பல்வேறு முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கமானது சில விடயங்களில் போதியளவு முன்னேற்றத்தைக் காண்பிக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  2015 ஒக்ரோபர் மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களைக் கூட சிறிலங்கா இன்னமும் நிறைவேற்றவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியைத் தேடும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் போன்றவர்களும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்பில் நேரடி விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். ‘சிறிலங்காவில் நீதியை நிலைநாட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபை கொண்டுள்ளது. ஏனெனில் போரின் போது தனது பங்களிப்பைச் செய்வதற்கு ஐ.நா தவறியிருந்தது’ என சிறிலங்காவின் வடகிழக்கில் இயங்கும் மனித உரிமைக் காண்காணிப்பு நிறுவனமான சமூக சிற்பிகள் அமைப்பின் இயக்குனர் செறின் சேவியர் தெரிவித்துள்ளார்.

காணாமற் போனோருக்கான அலுவலகம் ஒன்றை அமைப்பது என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் நீதிக்கான அரசியற் கடப்பாடாகக் காணப்படுகிறது. ‘காணாமற் போனவர்களின் உறவுகள் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அலைந்து திரிகிறார்கள். இவர்கள் இராணுவ முகாம்களின் அமைவிடத் தகவல்களையும் தாம் சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளின் பெயர் விபரங்களையும் வழங்கியுள்ளனர்’ என போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக வாதிடும் சட்டவாளரான கனகசபை இரட்ணவேல் தெரிவித்தார்.

‘பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நட்டஈடு தரவேண்டும் எனக் கோரவில்லை. அவர்கள் பொறுப்புக்கூறலையே எதிர்பார்க்கிறார்கள்’ என சட்டவாளரான இரட்ணவேல் தெரிவித்தார்.

மட்டக்களப்பில், ஜெயதீபா போன்ற தமிழ்ப் பெண்கள் தற்போதும் நம்பிக்கையுடன் வாழ்கின்றனர். அவர்கள் அடிக்கடி அதிகாரிகளின் கதவுகளைத் தட்டுகிறார்கள். தகவல்கள் அடங்கிய அறிக்கைகளைக் கையளிக்கிறார்கள். எனினும் இவர்களுக்காக பயங்கரமான உண்மை ஒன்று காத்திருக்கின்றது. ஒரு சிலர் மட்டுமே காணாமற் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துள்ளனர்.

ஐ.நா தகவலின் பிரகாரம் சிறிலங்காவானது ஈராக்கிற்கு அடுத்ததாக இரண்டாவது மிகப் பாரிய போர் இடம்பெற்ற இடமாகக் காணப்படுகிறது. ‘காணாமற் போனோர் அலுவலகத்தின் ஊடாக தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதில் ஒரு சில குடும்பங்களே விருப்பங் கொண்டுள்ளனர் என்பதே உண்மையாகும்’ என மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் நிறுவனத்தைச் சேர்ந்த றுக்கி பெர்னாண்டோ தெரிவித்தார். ‘காணாமற் போனோர் அலுவலகத்தின் ஊடாக காணாமற் போன 65,000 பேருக்கும் என்ன நடந்தது என்பதைக் கூறுவது என்பது சாத்தியமற்றதாகும்’ என றுக்கி பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஆங்கில மூலம் – MARWAAN MACAN-MARKAR
வழிமூலம்          – Nikkei Asian Review
மொழியாக்கம்   – நித்தியபாரதி

ஒரு கருத்து “சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரமும் வர்த்தக தொடர்பும்”

  1. Arinesaratnam Gowrikanthan says:

    நல்லிணக்கத்தை நம்பிய மக்களின் முதுகில் குத்துகிறார்கள். அழிவின் ஊடாகத்தான ஆக்கம் சாத்தியமானால், மீண்டும் வில்லேந்துவதுதான் விதிக்கப்பட்ட முடிவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *