மேலும்

சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளரின் வங்கிக் கணக்கில் 3.2 மில்லியன் ரூபா வந்தது எப்படி?

Kapila Gamini Hendawitharanaசிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் வங்கிக் கணக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 3.2 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியில் உள்ள மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் நடப்புக் கணக்கிலேயே இந்தப் பணம் யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை, அக்கரைப்பற்று, தம்பிலுவில், நுகேகொட, கொள்ளுப்பிட்டி, திருநெல்வேலி, பம்பலப்பிட்டி ஆகிய இடங்களில் இருந்து வைப்பில் இடப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக, வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏஎஸ்கே கேபிள் தொலைக்காட்சியை நடத்தும், எஸ்.எஸ்.குகநாதன் 1 மில்லியன் ரூபாவை வைப்பில் இட்டுள்ளார் என்று சிங்கள வாரஇதழான ராவய தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு வைப்பில் இடப்பட்ட பணம், மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரண, மற்றும்  ஐ.எம்.ஜி.குமார, பராகொட கமகே.வசந்த டயஸ், மற்றும் வஜிர லியனகே ஆகியோரால், மீளப் பெறப்பட்டுள்ளது.

செய்மதி தொழில்நுட்பத்தின் மூலம், பிரான்சில், சிறிலங்கா அரச தொலைக்காட்சி செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை, ஏஎஸ்கே தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்புவதற்கு, சிறிலங்கா அதிபர் செயலகத்தினால், 153 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது என்ற விபரமும் இந்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேஸ் சாலி மூலமாக, ஏஎஸ்கே தொலைக்காட்சி உரிமையாளரான குகநாதன், அப்போதைய சிறிலங்கா அதிபரின் செயலரான லலித் வீரதுங்கவைச் சந்தித்திருந்தார்.

இதற்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்ட போதும், நிகழ்ச்சிகள் பிரான்சில் ஒளிபரப்படவில்லை.

அதேவேளை, ஏஎஸ்கே தொலைக்காட்சி வடக்கு, கிழக்கில் அரச தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எந்தக் கட்டணமும் செலுத்தாமலேயே ஒளிபரப்பி வருகிறது.

குகநாதன் பிரான்சில் டான் தொலைக்காட்சி என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்தி வருகிறார் என்றும், ராவய செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *