மேலும்

சிறிலங்கா இராணுவத்தில் உள்ள ஆறு பாலியல் குற்றவாளிகளின் விபரங்கள் ஐ.நாவிடம் கையளிப்பு

Yasmin Sookaபாலியல் வல்லுறவு மற்றும் சித்திரவதை குற்றவாளிகளான ஆறு சிறிலங்கா படை அதிகாரிகள் பற்றிய தகவல்களை, பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றும் ஐ.நா குழுவிடம், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், சமர்ப்பித்துள்ளது.

தென்னாபிரிக்காவின் ஜொஹனஸ்பேர்க்கை தலைமையகமாக கொண்டியங்கும் இந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளராக, அனைத்தலுக மனித உரிமைகள் சட்ட நிபுணர் யஸ்மின் சூகா பணியாற்றுகிறார்.

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றும் ஐ.நா குழுவின் கூட்டம் ஜெனிவாவில் நாளை நடக்கவுள்ள நிலையிலேயே இயுது தொடர்பான அறிக்கை ஒன்றை, இந்த அமைப்பு சமர்ப்பித்துள்ளது.

நாளைய கூட்டத்தில், இந்த விடயத்தை சிறிலங்கா அரசாங்கத்துடன், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றும் ஐ.நா குழு பகிர்ந்து கொள்ளும் என்றும், நம்பகமான விசாரணைகள் நடக்கும் வரையில் இந்த அதிகாரிகளை இடைநிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரும் என்றும் தாம் நம்புவதாக யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர், விபரங்களை பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றும் ஐ.நா குழுவின் மூலமாக சிறிலங்கா அரசாங்கம் எம்மிடம் கோரியிருந்தது. இந்தநிலையில் நாம் குற்றவாளிகள் பற்றிய தகவல்களை அளித்துள்ளோம். இதற்கு சிறிலங்கா அரசாங்கம் உண்மையிலேயே நீதி வழங்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றும் ஐ.நா குழுவுக்கு அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சமர்ப்பித்துள்ள அறிக்கை, சித்தரவதை, மோசமான பாலியல் தாக்குதல்கள், மற்றும் நீண்டகாலம் தடுப்புக்காவலில் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த மூவர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட 55 பெண்களின் சாட்சியங்களை அடிப்படையாக கொண்டதாகும்.

இவர்களில் 48 பேர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும், 7 பேர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்திலும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்முறையை ஒரு சித்திரவதை முறையாக பின்பற்றும், கொள்கை குறித்த நம்பகமான விசாரணையை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் நடத்த தவறியுள்ளது. என்றும் யஸ்மின் சூகா குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டதாக, பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள், சித்திரவதைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளான ஆறு சிறிலங்கா படை அதிகாரிகளின் விபரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒருவர் லெப்.கேணல் அதிகாரி என்பதும், இன்னொருவர் மேஜர் தர அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளில் ஒருவர் ஐ.நா அமைதிப்படையிலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கருத்து “சிறிலங்கா இராணுவத்தில் உள்ள ஆறு பாலியல் குற்றவாளிகளின் விபரங்கள் ஐ.நாவிடம் கையளிப்பு”

  1. Murali Mailvaganam
    Murali Mailvaganam says:

    Neethikooruma sarvathesam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *