மேலும்

கருப்புக் கொடிகளுடன் சிறிலங்காவின் சுதந்திர நாள்

black-day (1)சிறிலங்காவின் 69ஆவது சுதந்திர நாளான நேற்று, வடக்கில் பல்வேறு இடங்களில், கருப்புக்கொடிகள் பறக்கவிட்டு துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி, நேற்று ஐந்து நாட்களாக கேப்பாபிலவு, விமானப்படை முகாம் முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டத்தில், ஈடுபட்டுள்ள பிலவுக்குடியிருப்பு மக்கள் கருப்புக் கொடிகளை பறக்கவிட்டு துக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்தப் பகுதி மக்களால் நேற்று எதிர்ப்புப் பேரணி ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது.

அதேவேளை, இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரியும், பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நேற்று மூன்றாவது நாளாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களும் கருப்புக் கொடிகளை ஏந்தியபடி,  சிறிலங்காவின் சுதந்திர நாளை துக்கநாளாக கடைப்பிடிப்பதாக தெரிவித்தனர்.

black-day (1)black-day (2)black-day (3)

mullaitivu

முல்லைத்தீவில் காணி உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதனிடையே, மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியம், நேற்று கருப்புக்கொடி ஏற்றி துக்கத்தை வெளிப்படுத்தியிருந்தது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு அருகே, நேற்று வட மாகாணசபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

black-day (4)black-day (5)black-day (6)black-day (7)

யாழ்.மாவட்டச் செயலகத்தில் சுதந்திர நாள் நிகழ்வுகள் இடம்பெற்ற போது, இந்தப் போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ். செயலகத்துக்கு அருகே செல்ல முடியாதபடி, காவல்துறையினர் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

வட மாகாண முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் நேற்றைய சிறிலங்கா சுதந்திர நாள் நிகழ்வுளைப் புறக்கணித்திருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாத்திரம், நேற்று கொழும்பில் நடந்த சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில்  பங்கேற்றிருந்தார்.

இரா.சம்பந்தன் உள்ளிட்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், எந்தவொரு சிறிலங்கா சுதந்திர நாள் நிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *