மேலும்

2020இல் மைத்திரியை போட்டியில் நிறுத்த சுதந்திரக் கட்சி முடிவு

maithripala-srisenaஅடுத்த அதிபர் தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேனவே போட்டியிட வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அண்மையில் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவுக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவில் 27 வீதமான சிறுபான்மையினரின் வாக்குகள் உள்ளன. சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெரும்பாலும் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரே தலைவராக மைத்திரிபால சிறிசேனவே இருக்கிறார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி நம்புகிறது.

2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் நாள் அதிபராகப் பதவியேற்ற போது, தாம் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். ஆனால் இப்போது, அரசியல் சூழல் முற்றிலுமாக மாறியுள்ளது.

எனவே தான், 2020 இல் நடக்கும் அதிபர் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவே போட்டியிட வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு சிறிலங்கா அதிபரே தலைமை தாங்கியிருந்தார். எனினும் அவர் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

அத்துடன், மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து, 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி  மத்திய குழு முடிவு செய்துள்ளது.

தற்போதைய அரசியலமைப்பு மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும், ஆனால், புதிய அரசியலமைப்புக்கு மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட தேவையில்லை என்றும் மத்திய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றும் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *