மேலும்

செயலணியின் அறிக்கையை பெறுவதில் இருந்து நழுவினார் சிறிலங்கா அதிபர்

report-submit-1பொறுப்புக்கூறல் பொறிமுறையில் உள்நாட்டு விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ள, நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொள்ளாமல் நழுவியுள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 2016 ஜனவரி 26ஆம் நாள் நியமிக்கப்பட்ட, மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான இந்த செயலணி 1306 குழுக் கலந்துரையாடல்கள், 4872 பொதுக்கூட்டங்கள், 1048 எழுத்துரு சமர்ப்பித்தல்களின் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, அறிக்கையை தயார் செய்துள்ளது.

கடந்த நொவம்பர் மாதம் 16ஆம் நாள் தயாரிக்கப்பட்டு, அதன் உறுப்பினர்களான 11 பேரும் கையெழுத்திட்டிருந்த இந்த அறிக்கையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், அறிக்கை பெற்றுக்கொள்வதற்கு சிறிலங்கா அதிபர் இழுத்தடித்து வந்தார். இறுதியாக நேற்று இந்த அறிக்கையை சிறிலங்கா அதிபரிடம் கையளிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

report-submit-1report-submit-2

எனினும் நேற்றைய நிகழ்வில் சிறிலங்கா அதிபர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவே அறிக்கையை பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த அறிக்கையில் போர்க்கால மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொறிமுறைகள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஒரு வெளிநாட்டு நீதிபதியேனும் இடம்பெற வேண்டும் என்று செயலணி பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதைகள், காணாமற்போதல், பாலியல் வல்லுறவு போன்ற மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு அளித்தல், சட்டவிரோதமானது என்றும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வுச் செயலணியின் அறிக்கை, இணையத்தளத்திலும் மும்மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *